மகாராஷ்டிராவை தொடர்ந்து கோவா: பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...என்ன செய்யப்போகிறது தலைமை?

மகாராஷ்டிராவை தொடர்ந்து கோவா: பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்...என்ன செய்யப்போகிறது தலைமை?

மகாராஷ்டிர அரசியல் ஆடுபுலி ஆட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த நிலையில் அடுத்ததாக கோவாவில் ஐந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு தாவியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மீதமுள்ள 5 சட்டமன்ற உறுப்பினர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்துள்ளது காங்கிரஸ் கட்சி.

கோவாவில் இன்று சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது ஐந்து எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்திற்கு மாற்றியுள்ளது. திங்கள்கிழமை காலை நிலவரப்படி, 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்தில் மொத்தமுள்ள 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 5 பேர் அக்கட்சியுடன் தொடர்பில் இருந்தனர், மேலும் ஐந்து பேர் அணுக முடியாத நிலையில் உள்ளனர். மற்றொரு எம்எல்ஏவான அலிக்சோ செக்வேரா வீட்டில் இருந்தபடியே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.

கோவா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபோ, திகம்பர் காமத், கேதார் நாயக், ராஜேஷ் ஃபல்தேசாய் மற்றும் டெலியாலா லோபோ ஆகிய ஐந்து எம்எல்ஏக்கள் நேற்று பாஜக முதல்வர் பிரமோத் சாவந்தை சந்தித்து ஆதரவளித்ததாக தகவல் வெளியானதால் கோவா அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதைத் தொடர்ந்து கோவா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நீக்கியதாக அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்தார். மேலும் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்துவதற்காக லோபோவும், காமத்தும் பாஜகவுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டினர் என்று தினேஷ் குண்டுராவ் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக தரப்ப்பில் ஒவ்வொருவருக்கும் தலா 40 கோடி ரூபாய் பேரம் பேசப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கிரிஷ் சோதான்கர் கூறியது பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரேனும் தன்னைச் சந்திக்க வந்தார்களா என்று கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதிலளித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்,“திங்கட்கிழமை முதல் சட்டமன்றம் கூட்டப்படுவதால் பல எம்எல்ஏக்கள் என்னைச் சந்திக்க வருகிறார்கள்” என்று கூறினார்.

கோவாவில் ஆளும் பாஜகவுக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனர், மேலும் 2 மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சைகள் ஆதரவு அக்கட்சிக்கு உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த கோவா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களிலும், கோவா ஃபார்வர்ட் கட்சி மற்றும் புரட்சிகர கோன்ஸ் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

கட்சித்தாவல் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக கோவா உள்ளது. கடந்த முறை 2017 சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது, ஆனால் 2022ல் ஆட்சி முடியும்போது அக்கட்சியில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கோவாவில் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு தாவி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in