`அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா'- ‘எய்ம்ஸ்’ பற்றிய கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி காட்டம்

`அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா'- ‘எய்ம்ஸ்’ பற்றிய கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி காட்டம்

"எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதற்கு தொடர்ந்து வந்து கேட்கிறீர்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா’’ என்று செய்தியாளர்களிடம் காட்டமாக கூறினார் அமைச்சர் மூர்த்தி.

மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், முடநீக்கியல் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஒட்டுமொத்த தென்னக்கத்திற்கே மிகப்பெரிய மருத்துவ பயன்பாடு உள்ள மருத்துவமனையாக திகழ்கிறது. கடந்த டிசம்பர் 21-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 40 லட்சத்தில் எலும்பு வங்கி திறக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி அமைப்பது இதுவே முதல்முறை. தற்போது மருத்துவமனைகளில் எலும்பு வங்கி பயன்பாடு மிகப்பெரிய தேவையாக உள்ளது. கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்கிறது. தற்போது தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் இதுபோன்ற எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. தற்போது அந்த எலும்பு வங்கியில் உயிரிழந்த 36 நோயாளிகளிடம் இருந்து எலும்புகள் கொடையாக பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புகளை கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு போலீஸ்காரர், கபடி வீரர், வாலிபால் வீரர் உள்பட விபத்துகளில் காயமடைந்த 7 பேருக்கு எலும்பு மற்றும் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 18-ம் தேதி மேல்மருவத்தூர் மருத்துவமனையில் ’இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக எல்லையில் யாருக்கு விபத்து நேர்ந்தாலும் 680க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்க செய்வது, அனுமதிக்கப்பட்ட முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வழங்கி அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. இந்த மகத்தான திட்டம் இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த இந்திய அளவிலான சுகாதாரத்துறை மாநாட்டில் இந்த திட்டம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். அவர்கள் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்ததெந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது என்று ஆலோசனை கேட்டுள்ளனர். இப்படி தமிழகம் இந்தியாவுக்கே சுகாதாரத்துறையில் வழிகாட்டியாக திகழ்கிறது. ஆண்டுதோறும், மாதந்தோறும் இந்த திட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ‘நம்மை காப்போம் 48’ திட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனை தொடக்கம் முதலே முதலிடத்தில் உள்ளது.

இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 3,185 பேர் விபத்துகளில் காயமடைந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் 3 கோடியே 5 லட்சத்து 49 ஆயிரத்து 175 ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இவர்களில் பலர் விபத்துகளில் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு வந்துள்ளனர். தற்போது அவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். இந்த திட்டத்தில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றி வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களை முதல்வர் பாராட்டியுள்ளார். இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் 96,807 பேர் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்கள், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் தற்போது நிலை என்ன என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், ‘‘பலமுறை மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி திமுக அரசின் முயற்சியால் தற்போது ராமநாதபுரம் மருத்துவமனையில் 50 மதுரை ‘எய்ம்ஸ்’ மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வகுப்புகள் நடக்கின்றன. அதன்மூலம், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை நடவடிக்கைகளை தொடங்கி, எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். கட்டிட வடிவமைப்பு அடுத்த மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு 2, 3 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்’’ என்றார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் பி.மூர்த்தி, எங்களிடம் வந்து எதற்கு தொடர்ந்து வந்து கேட்கிறீர்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா’’ என்று செய்தியாளர்களிடம் காட்டமாக கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in