
``ஈரோடு கிழக்கு தொகுதியில் இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக 43,000 வாக்குகளை பெற்றிருக்கிறது என்றால் உண்மையிலேயே அதிமுக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறது'' என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெற்ற முடிவு என்பது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முறைகேடுகளுக்கு கிடைத்த முடிவாகத்தான் தமாகா கருதுகிறது. அதிகப்படியான வாக்கு வித்தியாசம்தான் அதற்கு எடுத்துக்காட்டு.
ஜனநாயகத்தோடு போட்டியிட்டு பணநாயகம் வென்றுவிட்டது. ஆளுங்கட்சியை பொறுத்தவரை அவர்களுடைய ஆள்பலம், பணபலம் அதிகாரத்தை வைத்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை குறிவைத்து, அவர்களது பலவீனத்தை பயன்படுத்தி பட்டியில் பூட்டி வைத்து, வாக்குகளை பெறுவது என்பது இந்திய வரலாற்றிலேயே நடைபெறாத வண்ணம் இந்த இடைத்தேர்தல் நடந்துள்ளது.
ஆளுங்கட்சியின் வெற்றி என்பது தற்காலிக வெற்றி தான். இந்த வெற்றி செயற்கையான வெற்றி. இனிவரும் காலங்களில் ஜனநாயகத்திற்கான தேர்தலாக தேர்தல்கள் அமைய வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் கண்ணாடி போல் செயல்பட்டிருக்க வேண்டும். தற்போது உள்ள ஆளுங்கட்சியின் பணபலம், அதிகார பலத்தைத் தாண்டி தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
இவ்வளவு முறைகேடுகளைத் தாண்டி அதிமுக 43,000 வாக்குகளை பெற்றிருக்கிறது என்றால் உண்மையிலேயே அதிமுக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கிறது. இவ்வளவு அழுத்தம் கொடுத்தும் 25 சதவீத வாக்குகள் அதிமுக பெற்று இருக்கிறது என்றால் இனிவரும் தேர்தல்கள் முறையாக நடத்தப்பட்டால் அதிமுக பிரகாசமான வெற்றி பெறுவதற்கான சூழல் இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க தவறிவிட்டது. இனி வரும் காலங்களில் பாஜக கூட்டணி சார்ந்த வேட்பாளர்கள் இந்தியா முழுவதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பாக இந்த மாநிலங்கள் தேர்தல் முடிவுகள் இருக்கிறது" என்று தெரிவித்தார்.