பாஜகவில் இணையும் வாசன்... இரண்டாவது முறையாக கரையும் தமாகா!

பாஜகவில் இணையும் வாசன்... இரண்டாவது முறையாக கரையும் தமாகா!

“தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவில் இணைக்கப்போகிறார் வாசன்” என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவே இருந்துவந்த பேச்சுத்தான் என்றாலும் அண்மைக்காலமாக இன்னும் சத்தமாக பேசப்படுகிறது. என்னதான் நடக்கிறது தமாகாவில்?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆளுமையாக இருந்த ஜி.கே. மூப்பனார், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய  பொதுச்செயலாளர் என்ற உச்சபட்ச பதவி வரை வகித்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் 1996-ல் தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் போட்டதை எதிர்த்து காங்கிரஸை விட்டே வெளியேறி தமாகா என்ற புதிய கட்சியை தோற்றுவித்தார். அப்போது அவருக்கு துணையாக ரஜினி இருந்தார். கூட்டணி தோழனாக திமுக வந்தது. 

1996 சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றி கண்டது. தமாகாவுக்கு 39  எம்எல்ஏ-க்களும் 20 எம்பி-க்களும் கிடைத்தார்கள். ஆனால், அடுத்து வந்த 2001 சட்டமன்றத் தேர்தலில், எந்த ஜெயலலிதாவிடன் கூட்டணி சேரக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேவந்தாரோ அதே ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்தார் மூப்பனார். அந்தத் தேர்தலில் தமாகாவுக்கு 23 இடங்களில் வெற்றியும் கிடைத்தது. 

கட்சியை நடத்தவும் தமிழக அரசியலில் தனக்கான செல்வாக்கை நிரூபிக்கவும் அப்படி ஒரு முடிவை மூப்பனார் எடுத்தார். ஆனால், தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும், அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ளவும் தனது தந்தைக்கு நேர் எதிர்மாறான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்திருக்கிறார் ஜி.கே.வாசன். தமாகாவை பாஜகவுடன் இணைக்க வாசன் கட்சி நிர்வாகிகள் 70 சதவீதம் பேர் சம்மதம் தெரிவித்துவிட்டதாகச் சொல்லப்படும் நிலையில், புத்தாண்டில் இணைப்பு நடக்கும் என்கிறார்கள். 

மூப்பனார் மறைவுக்குப் பிறகு வாசனால் ஓராண்டு காலம்கூட தமாகாவை தனித்து நடத்தமுடியவில்லை. அதனால், மூச்சுத் திணறிப்போன மூப்பனார் பிள்ளை தமாகாவை காங்கிரஸோடு இணைத்தார். அதன்பின்னர் சுமார் 12 ஆண்டுகள்  காங்கிரஸில் இருந்த வாசனை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தது காங்கிரஸ். அவரால் கைகாட்டப்படுகிறவர்களே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால் காங்கிரஸுக்குள் சென்றாலும் வாசனின் ஆதரவாளர்கள் அங்கு ஒரு  தனி அணியாகவே  செயல்பட்டு வந்தார்கள். 

தவிர, காங்கிரஸை வளர்க்க கட்சித் தலைமை எதிர்பார்த்த அளவுக்கு வாசன் எதையும் செய்யவில்லை. காங்கிரஸ் தொண்டர்களுக்கும் அவரால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் தமாகாவை தூசுதட்டினார் வாசன். 2014 மக்களவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டது தமாகா. இம்முறை ஓரு இடம்  கூட கிடைக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தஞ்சாவூர் தொகுதியில் வேட்பாளரை நிறுத்தினார் வாசன். அதிலும் வெற்றிபெற முடியவில்லை. ஆனாலும்  பிஜேபியின் சிபாரிசால் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் வாசன். பாஜக அனுசரணை என்றாலும் முழுக்க முழுக்க அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவில் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மூப்பனார் தமாகாவை ஆரம்பித்தபோதும் சரி,  காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும் சரி அவருக்கான செல்வாக்கு அபரிமிதமாக இருந்தது.  எல்லா ஊர்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் இருந்தனர். சில ஊர்களில் காங்கிரஸில் இருப்பவர்கள் அனைவருமே மூப்பனாரின் ஆதரவாளராகவே இருந்தனர். அதனால் தொண்டர்கள் செல்வாக்கு உள்ள தலைவராக மூப்பனாரால் நிலைக்க முடிந்தது. தேர்தல்களில் அவரது கணக்கும் வென்றது. 

ஆனால், அவரைப் போல அவரது மகன் கோவிந்தவாசனால் வெற்றிக் கணக்குகள் எதையும் போடமுடியவில்லை. எடுத்த காரியங்கள் எல்லாமே சொதப்பலில் முடிகின்றன.  வாசன் தங்கள் யாருக்கும் எதையும் செய்துதரவில்லை என்கிற காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளில் தமாகாவின் முக்கிய தலைகள் பலரும் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் காங்கிரஸிலோ அல்லது திராவிடக் கட்சிகளிலோ இணைந்துவிட்டார்கள். இதனால் வாசனின் முகாம், மதுரைக்கு சோனியாவை அழைத்து வந்து படைதிரட்டிக் காட்டிய பழைய செல்வாக்கில் இப்போது இல்லை. 

பாஜகவால் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சமயத்திலேயே மத்திய அமைச்சர் பதவியையும் எதிர்பார்த்தார் வாசன். பாஜக தரப்பிலும் இதற்கு இசைவு தெரிவித்ததாகச் சொல்லப்பட்டது அப்போது. இதையடுத்து, வாசனுக்கு  தனி அதிகாரத்துடன் கூடிய இணையமைச்சர் பதவி காத்திருந்தது. ஆனால், அதற்காக பாஜக வைத்த நிபந்தனை வாசனை யோசிக்கவைத்தது. தமாகாவை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்பதே பாஜக வைத்த அந்த நிபந்தனை. இதுகுறித்து அப்போது தனது ஆதரவாளர்களை கூட்டி ஆலோசித்தார் வாசன். “காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம் அதற்கு நேர்மாறான கொள்கை உடைய  பாஜகவில்  இணைவது அவ்வளவு பொறுத்தமாக இருக்காது” என பலரும் கருத்துச் சொன்னார்கள். இதனால், மத்திய அமைச்சராகும் வாசனின் கனவு கலைந்து போனது.  

இந்த நிலையில், “இன்றைய காலகட்டத்தில் பாஜகவுடன் கட்சியை இணைப்பதைவிட எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.  மூப்பனார் ஐயாவின் ஆதரவாளர்கள், விசுவாசிகள் என பெருவாரியானவர்கள் தமாகாவை விட்டுப் போய்விட்டனர். தற்போதைய நிலையில் தனிக்கட்சி  நடத்துவதே பெரிய வேலையாக இருக்கிறது. அதனால் அரசியல் எதிர்காலம் மற்றும் அங்கீகாரம் கருதி பாஜகவுடன் இணைப்பு என்ற முடிவை நோக்கித்தான் வரவேண்டியுள்ளது” என்கிறார்கள் கட்சியில் மிச்சமிருக்கும் வாசனின் ஆதரவாளர்கள்.    

வாசன் இப்ப்போது இறங்கிவந்தாலும் முன்பு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பாஜக தற்போது வழங்கத் தயாராகயில்லை. பாஜகவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டாலும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் வருவதை சுட்டிக்காட்டி அமைச்சர் பதவி தருவதைத் தாமதப்படுத்தலாம். மக்களவைத் தேர்தலில் வாசன் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அப்போது அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்கிறார்கள்.

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திராவிடக் கட்சிகளுக்கு இணையாக தன்னை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்துவருவதால் வாசன் பாஜகவுக்கு வந்தாலும் தனித்த எந்த முக்கியத்துவம் இருக்காது என்கிறார்கள். பாஜக மூத்த தலைவர்களில்  ஒருவராக எந்த அதிகாரமும் இல்லாமல் எந்தச் செல்வாக்கும் இல்லாமல் இருக்க வேண்டிய நிலைதான் அவருக்கு ஏற்படும். அதேசமயம் அவரோடு பாஜகவுக்கு வரும் அவருடைய ஆதரவாளர்கள் அங்கேயும் ஒரு தமாகா அணியாகவே செயல்படுவார்கள்.  இது பாஜகவுக்குள் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்பதும் பாஜக தலைவர்களுக்குத் தெரியும்.  இருந்தாலும், வந்ததெல்லாம் வரவு என்கிற ரீதியில் வாசனையும் உள்ளே இழுத்துக்கொள்ள விரும்புகிறது பாஜக தலைமை. 

ஆக, தந்தை உருவாக்கிக் கொடுத்துவிட்டுப் போன கட்சியை வளர்க்கவும் முடியாமல், பராமரிக்கவும் இயலாமல், காங்கிரஸ் கட்சியில் நிலைக்கவும் முடியாமல் ரொம்பவே பட்டுத்தவித்துப் போனார் வாசன். அந்த நெருக்கடிகள் தான் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வளர்ந்த அவரை காவிக்கட்சிக்குள் தள்ளுகிறது. வாசனைப் பொறுத்தவரை இது கசப்பான முடிவுதான் என்றாலும் அவருக்கு இதைவிட்டால் வேறு வழியும் இல்லைே. அதேசமயம், ஒருவேளை பாஜகவில் கசப்பான அனுபவங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் வாசன் தமாகாவை கையிலெடுக்கலாம். அப்போதும் சிலர் அவர் பின்னால் போகத்தான் செய்வார்கள். அசைக்கமுடியாத அந்த நம்பிக்கை தான் வாசனை தைரியமாக பாஜகவுக்குப் போகவைக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in