பெருந்தலைவரைப் பற்றி புறம் பேசுபவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்: ஜி.கே.வாசன் சாபம்

ஜி.கே. வாசன்
ஜி.கே. வாசன்
Updated on
1 min read

திமுகவினரின் கட்டை விரலை வெட்டுவேன் என்று பெருந்தலைவர் காமராஜர் சொன்னதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில்  பேசியிருந்தார். இதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  ஜி.கே.வாசன் எம்.பி இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில், " தன்னலம் இல்லாமல் பொதுநலத்தோடும் , தேசநலத்தோடும் , தொலைநோக்கு பார்வையோடும் பல்வேறு திட்டங்களை அளித்து இந்நாடு வளர்ச்சியடைய தன் இறுதி மூச்சுவரை உழைத்த உத்தமர் கர்மவீரர் காமராஜர். இந்நாட்டையே வீடாகவும் , மக்களையே குடும்பமாகவும் நினைத்து வாழ்ந்த தவயோகி. நாடும், நாட்டின் மக்களின் வளர்ச்சியுமே  தன் வாழ்வின் நோக்கமாக கொண்டு வாழ்ந்து மறைந்தவர்.

சுயவிளம்பரத்திற்காக எந்த காரியத்தையும் செய்ததில்லை . அப்படி கேட்டவர்களை என் தாய் நாட்டிற்காக செய்ததை நான் ஏன் வெளிச்சம் போட்டு காட்டணும் என்று திருப்பி கேட்டவர். எதற்காகவும், யாருக்காகவும் வரம்பு மீறி அவர் பேசியதில்லை. நாகரிகமில்லா வார்த்தைகளை பேசுவது பெருந்தலைவரின் பழக்கமும் இல்லை. 

இப்படி பல அருங்குணங்களை கொண்ட பெருந்தலைவரை திமுகவின்  பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ஒருவர்,  காமராஜர் திமுகவின் கட்டைவிரலை வெட்டுவேன் என்று பேசினார் என்று கூறியிருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெருந்தலைவரை நேசிப்பவர்களும் , அவரது பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் தலைவர்களும் இவற்றை சகித்துக் கொள்ள மாட்டார்கள் . 

கொடுத்த வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி பொற்கால ஆட்சியை செய்து எல்லோருக்கும் உதாரணமாக திகழ்ந்தவர் பெருந்தலைவர்.  அவரைப்போல் தகுதியான தலைவர்கள் அன்றும் இல்லை , இன்றும் இல்லை , இனிமேல் பிறக்கப் போவதும் இல்லை. பெருந்தலைவரைப் பற்றி புறம்பேசி விளம்பரம் தேடிக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தில் இருந்தாலும் அவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்"  அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in