‘காலம் பதில் சொல்லும்’ - சித்துவின் சூசக ட்வீட்டின் பின்னணி என்ன?

‘காலம் பதில் சொல்லும்’ - சித்துவின் சூசக ட்வீட்டின் பின்னணி என்ன?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முக்கியக் காரணம் என விமர்சிக்கப்படுபவர் அம்மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து. அவர் மீதான விமர்சனங்கள் உச்சமடைந்திருக்கும் நிலையில் அதற்குப் பதிலடியாக இன்று தனது பாணியில் இந்தியில் ட்வீட் செய்திருக்கிறார் சித்து. ‘எனக்கு எதிரான கருத்துகளுக்கு அடிக்கடி அமைதியாகச் செவிமடுப்பேன். அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு காலத்துக்கு உரிமை வழங்கியிருக்கிறேன்’ என அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒழுங்கு நடவடிக்கை கோரி கடிதம்

கட்சியைவிட பெரிய ஆளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயல்வதாக சித்து மீது குற்றம்சாட்டியிருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் சவுத்ரி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கட்சித் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஏப்ரல் 23 தேதியிட்ட அந்தக் கடிதம், திங்கள் கிழமை (மே 2) பொதுவெளியில் வெளியிடப்பட்டது. சித்துவின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்பாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ராஜா வரிங்குக்கும் அவர் விரிவான கடிதம் எழுதியிருக்கிறார். கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசை சித்து மிகக் கடுமையாக விமர்சித்துவந்தார். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத அரசு என்றும் குற்றம்சாட்டினார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பல முறை கேட்டுக்கொண்டபோதும் அவர் கேட்கவில்லை என ஹரீஷ் சவுத்ரி கூறியிருக்கிறார்.

ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸுக்குப் படுதோல்வி கிடைத்ததையடுத்து, அம்மாநிலங்களின் காங்கிரஸ் கட்சித் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து பதவிவகித்துவந்த நிலையில், அவர் பதவி விலகினார்.

சித்துவுக்குப் பதிலாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக அமரீந்தர் சிங் ராஜா வரிங் சமீபத்தில் பொறுப்பேற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சித்து வந்திருந்தபோதிலும் மேடைக்குச் செல்லவில்லை எனக் குறிப்பிட்டிருக்கும் ஹரீஷ் சவுத்ரி இது மன்னிக்க முடியாதது எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்ட சுர்ஜித் சிங் திமன், கேவல் தில்லான் போன்றோரைச் சமீபத்தில் சித்து சந்தித்ததாகவும் ஹரீஷ் குற்றம்சாட்டியிருந்தார்.

அவரது கடிதம் தொடர்பாக அமரீந்தர் சிங் ராஜா வரிங் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், அனைவரும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

சீண்டிக்கொண்டே இருக்கும் சித்து

சித்து காங்கிரஸில் இருந்தபடியே தொடர்ச்சியாகக் கட்சிக்கு எதிராகக் கருத்து தெரிவித்துவருகிறார். தனது சொந்த மாநிலமான பிஹாரிலிருந்து புதிய தொடக்கத்தை ஏற்படுத்தப்போவதாகத் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அப்போது அவரை வாழ்த்தி சித்து ட்வீட் செய்தார்.

அதுமட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தபோது, அவருடன் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in