ஈகோவை விட்டொழித்து இணைந்து நில்லுங்கள்!

எதிர்க்கட்சிகளுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
ஈகோவை விட்டொழித்து இணைந்து நில்லுங்கள்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜக உத்தர பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்திருந்தாலும், கடந்த முறையைவிட இம்முறை அது வென்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தனித்தனியே நின்றதே. அனைத்து எதிர்க்கட்சிகளும் கட்சிகளும் ஒற்றுமையாக, ஓரணியில் திரண்டு போட்டியிட்டு இருந்தால் பாஜக அங்கு வெற்றி பெற்றிருக்காது” என்றார்.

மேலும் பேசிய அவர், “இனிவரும் காலத்திலாவது, பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் நிச்சயம் பாஜவை வீழ்த்த முடியும். பாஜகவினர் மத உணர்வுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடிவருகின்றனர். இது ஆபத்தான சூழலுக்கான அறிகுறியாகும்" என்றார்.

கோல்குல்ராஜ் கொலை வழக்குத் தீர்ப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த திருமாவளவன், “அந்த வழக்கின் வெற்றிக்கு உழைத்த வழக்கறிஞர் ப.பா.மோகனைப் பாராட்டுகிறோம். ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தமிழக முதல்வர் விரைந்து அதற்கான தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.