'ஜாதிச்சான்றிதழுக்குப் பதில் இதைக் கொடுங்கள்...!'

திராவிடர் விடுதலைக் கழக கூட்டத்தில் பரபரப்புத் தீர்மானம்
'ஜாதிச்சான்றிதழுக்குப் பதில் இதைக் கொடுங்கள்...!'

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில செயலவை (செயற்குழு) கூட்டம், ஈரோடு கே.கே.எஸ்.கே. திருமண மகாலில் இன்று நடந்தது. கூட்டத்தில் கழகத்தின் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், கடந்தகால செயல்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி விமர்சனமும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கழக பொதுச் செயலாளர் கொளத்தூர் மணி முன்மொழிந்த 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சாமியார்கள் மூலம் அப்பாவி மக்கள் ஏமாறுவதும், உடைமைகளை பறிகொடுப்பதும் அதிகரித்து வருகிறது. மக்களின் மூட நம்பிக்கையை மூலதனமாக்கி மக்களை ஏமாற்றும் சாமியார்களைத் தடுத்து நிறுத்தவும், இந்திய அரசியல் சட்டம் குடிமக்களின் கடமையாக வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கவும், கர்நாடகம், மகராஷ்டிரா மாநிலங்களில் அமலில் இருப்பதைப் போல் "மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்" ஒன்றை தமிழ்நாடு அரசு கொண்டு வர வேண்டும். மூடநம்பிக்கைகளை விலக்கி, அறிவியலையும், பகுத்தறிவையும் பரப்பும் பிரச்சாரங்களுக்கு தமிழக அரசு தடையின்றி அனுமதி வழங்க வேண்டும்.

ஜாதி அமைப்புகள் சமூக நீதியைப் புறம்தள்ளிவிட்டு தேர்தல் அரசியலுக்கான வாக்கு வங்கிகளாக ஜாதியைப் பயன்படுத்தி அதன் பெருமைகளைப் பேசி வருவது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இதற்கு வலிமை சேர்ப்பது போல் ஜாதிக்குள்ளே வரன் தேடும் சில வணிக அமைப்புகள், ஊடகங்களில் ஜாதிக்குள் வரன் தேடும் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. இது போன்ற ஜாதிக்குள் வரன் தேடும் விளம்பரங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்தகைய விளம்பரங்களை ஊடகங்கள் பிரசுரிக்கவோ, ஒலிபரப்பவோ கூடாது.

ஈரோட்டில்  நடைபெற்ற மாநில செயலவை கூட்டம்.
ஈரோட்டில் நடைபெற்ற மாநில செயலவை கூட்டம்.

ஜாதிச்சான்றிதழுக்கு மாற்று

மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஜாதிச்சான்றிதழுக்கு மாற்றாக "இட ஒதுக்கீடு உரிமைச் சான்றிதழ்" அல்லது "வகுப்புச் சான்றிதழ்" (community certificate) வழங்கி - சான்றிதழ்களில் ஜாதிப் பெயரைத் தவிர்த்து விடலாம் என்று அரசைக் கேட்டுக்கொள்கிறோம். ஜாதி குறித்த விவரங்கள் வருவாய்த் துறையில் மட்டுமே இருந்தால் போதும். சான்றிதழ்களில் வேண்டியதில்லை என்பதே எங்கள் கோரிக்கை.

ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நீடிப்பதோடு தற்போதைய சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி ஜாதி வெறிக் குற்றவாளிகள் தப்பி விடுவதைத் தடுக்கவும், ஜாதி இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும் ஜாதி ஆணவப் படுகொலைகள் தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஜாதி, மத மறுப்பு இணையர்களைப் பாதுகாக்கும் கடமை திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டி அவர்களைப் பாதுகாக்கும் தனிப் பிரிவுகள், விடுதிகளை உருவாக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ஆரிய திராவிட போர்

"புராண காலத்திலிருந்து இந்த நாட்டில் நடப்பது அரசியல் போராட்டமல்ல, ஆரிய திராவிடப் போராட்டம் தான்" என்றார் பெரியார். தமிழ்நாட்டில் காலூன்றத் துடிக்கும் சனாதன சக்திகள் தொடர்ச்சியாக, பல்வேறு சூழ்ச்சிகளோடு அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும் அவர்களால் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ஆட்சியிலிருந்த அதிமுகவின் வலிமையற்றத் தலைமையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல ஆண்டு காலம் தமிழ்நாட்டை "ஆட்டி வைத்த" பார்ப்பனிய சக்திகள், திமுக ஆட்சிக்கு வந்துவிடாமல் தடுக்கும் அத்தனை திரைமறைவு முயற்சிகளையும் மேற்கொண்டு அதிலும் தோற்றுப்போயின. திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய சனாதன ஆட்சியின் மனுவாதத் திட்டங்கள் நெருக்கடிக்கு உள்ளாயின. "திராவிட மாடல்" என்பதே திமுக வின் கொள்கை என்று திட்டவட்டமாக அறிவித்த திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை நோக்கித் தீவிரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இந்த வரலாற்றுப் பின்னணியில் பெரியார் சுட்டிக்காட்டிய ஆரிய திராவிடப் போராட்டம் என்பது இப்போது திராவிட மாடலுக்கும், ஆர்.எஸ்.எஸ் சனாதன ஆரியத்துக்குமான போராட்டமாக வடிவம் பெற்று நிற்கிறது. திராவிட மாடல் தனக்கான கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம், தன்னுரிமை, மொழி, தொழில், மற்றும் நிதிக் கொள்கைகளைக் கட்டமைத்து உருவாக்கி ஒற்றை இந்தியா என்ற சூழ்ச்சிக்கு எதிராக தமிழ்நாட்டைக் கட்டி எழுப்பும் முனைப்புகளில் முன்னேறி வருகிறது. இந்த வளர்ச்சிகளை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தனது முழுமையான அதிகார பலத்தையும் ஒன்றிய ஜாதி மேலாதிக்க ஆட்சி தமிழ்நாட்டின் மீது செலுத்தி திராவிட மாடலை முறியடிக்க முயலுகிறது.

இறையாண்மை கொண்ட தமிழ்நாட்டு சட்டமன்றத் தீர்மானங்களை, ஆளுநரைப் பயன்படுத்தி முடக்கும் அப்பட்டமான சட்ட மீறல்கள் அரங்கேறி வருகின்றன. வேத காலத்தில் தொடங்கி தொடரும் இந்தப் போராட்டத்தை முறியடிக்க வேண்டிய தேவையும், அவசியமும் எழுந்து நிற்கிறது. தமிழின உணர்வாளர்கள் இந்தப் போராட்டத்தில், வரலாற்று சமூக அரசியல் வெளிச்சத்தில் புரிந்துகொண்டு கட்சி வேறுபாடின்றி தமிழ்நாடு அரசின் திராவிட மாடலுக்கு ஓர் அணியாய் திரண்டு ஆதரவு தர வேண்டும் என்று இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

முன்னதாக கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் தலித் சுப்பையா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.