முறைகேடுகளை தவிர்க்க பொங்கல் பரிசுக்கு குட்பை சொல்லும் தமிழக அரசு!

முறைகேடுகளை தவிர்க்க பொங்கல் பரிசுக்கு குட்பை சொல்லும் தமிழக அரசு!

குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்புக்குப் பதிலாக, இந்த ஆண்டு 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளின் நெருக்கடிகளுக்குப் பயந்தே திமுக அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர் களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் சுமார் 1,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், துணிப்பை மற்றும் கரும்பு என 21 பொருட்கள் அந்தத் தொகுப்பில் இருந்தது. ஒரு சில இடங்களில் ஒன்றிரண்டு பொருட்கள் குறைவாகவே இருந்தன.

பொங்கல் பரிசுத் தொகுப்பில், இளகிப்போன வெள்ளம், வண்டுகளுடன் பச்சரிசி, மைதா கலந்த கோதுமை மாவு, தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் எண்ணெய் வகைகளைக் கொடுப்பதாக சமூகவளைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி மீது கடுமையான விமர்சனங்களை வைத்தன. இதைத் தொடர்ந்து, தவறு செய்த 6 நிறுவனங்கள் மீது சுமார் 3.75 கோடி அளவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

“பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் தமிழக அரசு சுமார் 210 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருக்கிறது. தவறு செய்த நிறுவனங்களுக்கே மீண்டும் சப்ளை செய்ய அனுமதி வழங்கி இருப்பது, ஊழல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. திமுக ஆட்சி நிறைவுக்கு வந்ததும் இதில் தொடர்புடையவர்கள் உள்ளே செல்வார்கள்“ எனத் தமிழக அரசுக்கு எதிராக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் இந்த விஷயத்தில் தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அதிமுக அரசு காலத்தில் கடந்த 2020 பொங்கல் பண்டிகைக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2021-ல், பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் உயர்த்தி வழங்கப்பட்டது. அப்போது ஒரு சில இடங்களைத் தவிர பெரிதாக விமர்சனங்கள் வெடிக்கவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்க பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

இது குறித்து விவரமறிந்தவர்கள் வட்டாரத்தில் பேசினோம். “பொங்கல் பரிசு திட்டம் மக்களை நேரடியாகச் சென்று சேர்வதால், ஆட்சிக்கு நற்பெயர் கிடைக்கும் என்று நினைத்தே அதிகமான பொருட்களுடன் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் எண்ணினார். ஆனால், அவர் நினைத்ததுக்கு நேர்மாறாகவே எல்லாம் நடந்துவிட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் விவகாரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களால் முதல்வரிடம் எந்தப் புகாரும் தெரிவிக்க முடியவில்லை. முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரே இந்த கொள்முதல் விவகாரங்களைக் கவனித்துக் கொண்டதே அதற்குக் காரணம். இருந்தாலும் கடைசி நேரத்தில் இந்த விவகாரம் முதல்வரின் கவனத்துக்கும் போய்விட்டது. ஆனாலும் அவரால் இந்த விஷயத்தில் அழுத்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை.

தனக்கு நெருக்கமானவர்களே தனது எண்ணங்களுக்கு மாறாக செயல்படுவதாலும், திட்டங்கள் தொடர்பான ரகசிய கோப்புகள் அண்ணாமலை கைக்குப் போய்விடுவதாலும் முதல்வரால் எதுவும் செய்யமுடியவில்லை. அதேசமயம் இன்னும் ஒரே வருடத்தில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், திட்டங்களைச் செயல்படுத்தும் விதத்தில் மிகவும் கவனமாகச் செயல்பட நினைக்கிறார் முதல்வர். அதற்காகவே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு வழங்காமல், ஆயிரம் ரூபாய் கொடுக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். இதுகூட நல்ல முடிவுதான்” என்றார்கள் அவர்கள்.

டி.கே.எஸ்.இளங்கோவன
டி.கே.எஸ்.இளங்கோவன

இது குறித்து திமுக செய்தித்தொடபுச் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவனிடம் பேசினோம். “கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு சில இடங்களில் வழங்கப்பட்ட பொருட்களில் சிறிய குறைபாடுகள் இருந்ததாக புகார் வந்தது. அதை அப்போதே சரி செய்துவிட்டோம். ஆனாலும் சிலர் இதை ஊதிப் பெரிதாக்கினார்கள். இந்த ஆண்டு அப்படி எந்த சர்ச்சையும் வரக்கூடாது என்பது தமிழக அரசின் எண்ணமாக இருக்கிறது. அதனால் இந்த ஆண்டு ரொக்கமாகக் கொடுக்கலாம் என்ற யோசனை இருக்கிறது. ஆனால், இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்றார்.

ஒருவேளை, இந்த ஆண்டு பொங்கல் பரிசுக்குப் பதிலாக ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்க தமிழக அரசு முன்வந்தால், “நாங்கள் ஆயிரம் ரூபாயும் கொடுத்து பொங்கல் பரிசுப் பொருட்களும் கொடுத்தோமே” என அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அதையும் சமாளிக்க வேண்டிய கட்டாயமும் திமுக அரசுக்கு ஏற்படலாம். எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in