தினமும் உண்மைக்கு மாறான செய்திகளைப் பேசி அண்ணாமலை வம்பில் மாட்டிக்கொள்கிறார் - துரைமுருகன் கிண்டல்!

துரைமுருகன்
துரைமுருகன்

''தமிழகத்தில் 40 க்கும் மேற்பட்ட அணைகளை திமுக தலைமையிலான அரசு கட்டியுள்ளது, அண்ணாமலை சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய்''என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் நீர்வளம் பாதுகாக்கப்பட்டது. அவர் 12 அணைகளை கட்டினார். ஆனால் தமிழகத்தில் 6 முறை ஆட்சியில் இருந்த திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருப்பதை இன்று (23.9.2023) வெளிவந்த “இந்து தமிழ் திசை ” நாளிதழ் ஒரு செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

"தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் விவசாயத்தை பாதுகாக்க 12 அணைகளை கட்டினார். ஆனால், ஆறாவது முறையாக ஆட்சி செய்யும் திமுக 5 அணைகளை மட்டுமே கட்டியுள்ளது" என்று ஒரு தவறான குற்றச்சாட்டை அண்ணாமலை அவர்கள் திமுக மீது சுமத்தி இருக்கிறார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

நித்தம் நித்தம் இப்படிப்பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை பேசி வம்பில் மாட்டிக் கொள்வதை நண்பர் அண்ணாமலை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். அதில் ஒன்று தான் இந்த தவறான குற்றச்சாட்டு.

பெருந்தலைவர் காமராஜர், கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை, வைகை அணை, மணிமுத்தாறு அணை போன்ற அணைகளை கட்டினார் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஆனால், கழக ஆட்சியில் 5 அணைகளை மட்டுமே கட்டினார்கள் என்று அண்ணாமலை அவர்கள் சொல்வது ஜமக்காலத்தில் வடிகட்டிய பொய்.

நம்பியாறு அணை அணை, பொய்கையாறு அணை, கடானா அணை, இராமநதி அணை, கொடுமுடியாறு, பாலாறு, பொருந்தலாறு அணை, மருதாநதி அணை, பரப்பலாறு அணை, வடக்கு பச்சையாறு அணை, பிளவுக்கல் அணை, மோர்தானா அணை, அடவிநயினார் அணை, ராஜாதோப்பு அணை, ஆண்டியப்பனூர் ஓடை அணை, சாஸ்தா கோயில் அணை, குப்பநத்தம் அண, இருக்கன்குடி அணை, செண்பகத்தோப்பு அணை,நங்காஞ்சியார் அணை, நல்லதங்காள் ஓடை அணை, மிருகண்டாநதி அணை, வரதாமநதி அணை, வரட்டாறு வள்ளிமதுரை அணை இப்படி 40 க்கும் மேற்பட்ட அணைகளை கட்டியது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சி குற்றம் குறைகளை சொல்வது தவறில்லை. ஆனால், அவ்வாறு சொல்வதற்கு முன், சொல்கிற குற்றச்சாட்டு உண்மையா என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நண்பர் அண்ணாமலைக்கு நான் சொல்கிற ஒரு யோசனையாகும். இல்லாவிட்டால், அவர் கூறும் குற்றச்சாட்டு யாவும் புஸ்வானமாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in