‘விரைவில் களத்தில் சந்திப்போம்’: காயத்ரியின் குமுறல் சவால்!

‘விரைவில் களத்தில் சந்திப்போம்’: காயத்ரியின் குமுறல் சவால்!

பாஜகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அறிவிப்பு வெளியானதும், பாஜகவுக்கு பலவகையிலும் நன்றி தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், ‘விரைவில் களத்தில் சந்திப்போம்’ என அறிக்கையை முடித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய ஆருடங்களை கிளப்பியுள்ளது.

பாஜகவில் 8 வருடங்களுக்கு முன்னர் சங்கமித்தவர் காயத்ரி ரகுராம். நடிகை மற்றும் நடன இயக்குநராக சினிமாவில் பெயர் பெற்றிருந்த காயத்ரியின் அரசியல் இருப்பு, பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதும் கேள்விக்குறியானது. டெய்சி சரண் - திருச்சி சூர்யா இடையிலான மோதலில், விநோதமாக காயத்ரி கட்டம் கட்டப்பட்டார். இதன் பின்னணியில் நீண்ட காலமாக நீடித்த அண்ணாமலை - காயத்ரி இடையிலான புகைச்சல் வெளியுலகுக்கு தெரிய வந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து அண்ணாமலைக்கு எதிராக காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசினார். குறிப்பாக ‘பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என்ற காயத்ரியின் புகார் தேசிய அளவிலும் பேசு பொருளானது. இதனிடையே காயத்ரி இடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக பாஜக அறிவிக்க, ராஜினாமா செய்கிறேன் என காயத்ரியும் பதிலடி தந்தார். இந்த சூழலில். கட்சியிலிருந்து காயத்ரி நிரந்தரமாக நீக்கப்படுவதாக, அண்ணாமலை ஒப்புதலுடன் கட்சியின் மாநில தலைமை அலுவலக பொறுப்பாளர் ஜெ.லோகநாதன் இன்று அறிவித்துள்ளார்.

இதற்கான பதிலடி, காயத்ரி ரகுராமிடமிருந்து வேகமாக வெளிவந்தது. அதில் ரகம்ரகமாய் நன்றிகளை பட்டியலிட்டு தனது அரசியல் ஆட்டத்தின் அடுத்த கட்டத்தை சீற்றத்துடன் பதிவு செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம். “என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி.என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி. என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி. என்னை மானபங்கம் செய்ததற்கு நன்றி. என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டதற்கு நன்றி. எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி.

என்னால் திரும்பக் கொண்டுவர முடியாத இளமைக்காலத்தை பறித்ததற்கு நன்றி. என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி. பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி. நீதி வழங்காததற்கு மிக்க நன்றி.

கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன்” என்று குமுறல் வெடித்துள்ள காயத்ரி, ‘விரைவில் களத்தில் சந்திப்போம்’ என்ற சவாலுடன் முடித்துள்ளார்.

காயத்ரி வெளியிட்டுள்ள நன்றிகளின் பட்டியல் தேர்ந்த அரசியல்வாதியின் நுணுக்கத்தோடு, மக்கள் மத்தியில் அனுதாபத்தை சம்பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் ’விரைவில் களத்தில் சந்திப்போம்’ என்று காயத்ரி விடுத்துள்ள எச்சரிக்கை, அவர் அடுத்தபடியாக திமுகவில் சேரப்போகிறாரா என்ற எதிர்பார்ப்புக்கு வலு சேர்த்துள்ளது. காயத்ரி திமுகவில் சேர்கிறாரோ இல்லையோ, பாஜகவுக்கு எதிரான ஆட்டத்தில் இனிமேல் வேகமெடுக்கப் போகிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in