`துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன்; அண்ணாமலை பதில் அளிக்கும் வரை அமைதியாக இருப்பேன்'- காயத்ரி ரகுராம்

`துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன்; அண்ணாமலை பதில் அளிக்கும் வரை அமைதியாக இருப்பேன்'- காயத்ரி ரகுராம்

திமுக பிரமுகர் ஒருவரை துபாய் ஹோட்டலில் சந்தித்தது குறித்தான கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பாஜகவில் உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அக்கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனாலும் பாஜக உள்விவகாரங்களைத் தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் டெய்சி சரண், சூர்யா சிவா ஆடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்தும், தவறு செய்பவர்களைக் கட்சிக்குள் தொடர்ந்து வைத்திருப்பது குறித்தும் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அதற்கு முன்பாகவே அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக சோமர்செட் நட்சத்திர விடுதியில் காயத்ரி ரகுராம்- சபரீசன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கு இந்த சந்திப்பு இருந்தது. துரோகிகளுக்கு பாஜகவில் இடம் இல்லை” எனப் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்னுடைய தோழியின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அவள் என்னையும், பேஷன் துறையில் உள்ள சிலரையும் அழைத்திருந்தாள். அப்போது நடந்த சந்திப்பு எதேச்சையானது” என காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் திமுக முக்கிய பிரமுகர் ஒருவரை காயத்ரி ரகுராம் துபாயில் உள்ள ஹோட்டலில் சந்தித்ததாக ட்விட்டரில் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்குப் பதில் அளிக்கும் விதமாக காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “முதலில் அவர்கள்,  சென்னை சோமர்செட் ஹோட்டலில் சபரீசனுடன் சந்தித்ததாக என்னை மோசமான முறையில் குறிவைத்தனர். துபாயில் திமுக பிரமுகர் ஒருவரை நான் சந்தித்ததாகச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் துபாய் ஹோட்டலில் யாரைச் சந்தித்தேன்? இதற்கு  அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். அதுவரைக்கும் நான் அமைதியாக இருக்கப் போகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in