சசிகலாவிற்கு ஆதரவாக திரளும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்

என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் புத்திச்சந்திரன், செல்லப்பாண்டியன்.
பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் புத்திச்சந்திரன், செல்லப்பாண்டியன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கோயில், கோயிலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு படை எடுத்து வருகிறார்கள்.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட 27 அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் திமுக 159 இடங்களையும், அதிமுக 75 இடங்களையும் கைப்பற்றின. அதிமுகவின் 11 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர். இதன் பின் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியடைந்தது. தொடர் தோல்விகளில் துவண்டு கிடக்கும் அதிமுகவிற்கு புதுரத்தம் பாய்ச்ச சசிகலா, டி.டி.வி.தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் அதிமுகவிற்குள் எழுந்தது. நீருக்குள் மூழ்கிய பந்து போல கிடந்த அந்த கோரிக்கை இந்த வாரம் சட்டென மேல் எழுந்து வந்தது.

கோப்பு படம்

இந்த நிலையில் தான், தேனியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் மார்ச் 2-ஆம் தேதி தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் தேனி மாவட்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். அப்போது, அதிமுகவில் சசிகலாவையும், டி.டி.வி. தினகரனையும் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று தங்கள் கோரிக்கையை கட்சித்தலைமைக்கு கொண்டுச் செல்லுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்திடம் அவர்கள் கோரிக்கையை முன் வைத்தனர். இந்த கூட்டம், அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.

அதற்கு அடுத்த நாளே ஓ.பன்னீர் செல்வத்தை, மதுரை மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சந்தித்து மூன்று மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தான் திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோயில், கோயிலாகச் சென்று சசிகலா சாமி தரிசனம் செய்து வருகிறார். அத்துடன் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி வருகிறார்.அவரை ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நேற்று சந்தித்து ஆலோசனை செய்தார். ஏன் சசிகலாவை ஓபிஎஸ் தம்பி சந்தித்தார் என்ற பரபரப்பு முடிவதற்குள் நேற்று இரவு நீலகிரியைச் சேர்ந்த உணவுத்துறை முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன், தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் ஆகியோர் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தனர். அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓ.பன்னீர்செல்வத்துடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து முன்னாள் அமைச்சர்கள் புத்திச்சந்திரன், செல்லப்பாண்டியன் தரப்பினரிடம் கேட்டதற்கு,‘ சசிகலாவையும், தினகரனையும் அதிமுகவில் இணைக்க கோரி நேரில் வந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்த வந்தார்கள்’ என்று கூறினர்.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்கையில், 'அதிமுகவில் சசிகலாவையும்,டி.டி.வி.தினகரனையும் சேர்க்க கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் பச்சைக்கொடி காட்டிவிட்டார். தென் மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ் வழியில் செல்லத் தயாராகி விட்டனர். ஆனால், இணை ஒருங்கிணைப்பாளரான எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று தான் தெரியவில்லை. அதில் தான் இருக்கிறது அதிமுகவின் எதிர்காலம்' என்று கூறினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in