சமையல் எரிவாயு விலை குறைப்பு... இந்தியா கூட்டணிக்கு பயந்துவிட்டதா பாஜக?

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் குறைத்து இந்திய மக்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மத்திய பாஜக அரசு. “இதற்கெல்லாம் காரணம், ‘இந்தியா கூட்டணி’ கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்தான். இதுவே எங்களுக்கான முதல் வெற்றி” என்று எதிர்க்கட்சிகள் ஏக சந்தோஷத்தில் குதிக்கின்றன. தேர்தல் நெருக்கத்தில் இன்னும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் பாஜக அரசு அறிவிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

2014-ல் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 414 ரூபாயாக இருந்தது. அதன்பின்னர் படிப்படியாக உயர்ந்த சிலிண்டரின் விலை இந்த 9 ஆண்டுகளில் 1,118 ரூபாய் வரைக்கும் வந்தது.

அதேபோல தொடக்கத்தில் சிலிண்டருக்கான மானியத்தொகை 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவந்தது. அது தற்போது 39.81 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இப்படி ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த சிலிண்டரின் விலையைக் குறைக்க வருடக்கணக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களால் எதுவும் நடக்கவில்லை. இந்த சூழலில்தான் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 200 ரூபாய் இறக்கி இரக்கம் காட்டியுள்ளது மத்திய பாஜக அரசு.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

“சிலிண்டர் விலைக் குறைப்பானது வரப்போகும் தேர்தலுக்கான பரிசு” என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் அதேசமயம், “இது ரக்‌ஷாபந்தன் மற்றும் ஓணம் பண்டிகையில் சகோதரிகளுக்கான பிரதமரின் பரிசு” என்று பெருமிதப்படுகிறது பாஜக அரசு.


பாஜகவை பதறவைத்த கர்நாடக மாடல்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் பாஜக எதிர்கட்சிகளின் எந்த விமர்சனத்தையும் காதில்கூட வாங்கிக்கொண்டதில்லை. அத்தியாவசியப் பொருட்கள் விலை, சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் டீசல் விலை என எதன் விலை உயர்ந்தாலும், அதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை ஏவினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தியதே இல்லை பாஜக அரசு. ஆனால் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தோல்வி, பல விஷயங்களில் பாஜகவை யோசிக்க வைத்துவிட்டது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்க விழாவில்...
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்க விழாவில்...

எப்படியும் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியமைத்துவிடலாம் என்ற கனவோடு இருந்தது பாஜக. பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சுற்றிச்சுற்றி பிரச்சாரம் செய்தார்கள். ஆனாலும், அம்மாநிலத்தில் காங்கிரஸ் பாஜகவை படுதோல்வி காணச் செய்தது.

இதற்கு முக்கிய காரணம், அதன் தேர்தல் வாக்குறுதிகள்தான். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்து தேர்தலின் போக்கையே தன்பக்கமாக திருப்பிக் கொண்டது காங்கிரஸ். சொன்னபடியே அந்த மாநிலத்தில் அடுத்தடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை மக்களவைத் தேர்தலுக்கும் தக்கவைத்திருக்கிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு.

அடுத்த சில மாதங்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள் சட்டமன்றத் தேர்தல்களை சந்திக்கவுள்ளன. “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 500 ரூபாய்க்கு சிலிண்டர் தருவோம்” என்று மத்தியப் பிரதேசத்தில் இப்போதே தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டது காங்கிரஸ். மற்ற மாநிலங்களிலும் இதே வாக்குறுதியை மக்களிடம் கொண்டுசேர்க்கவும் காங்கிரஸ் திட்டமிடுகிறது. ‘கர்நாடக பார்முலா’வை பின்பற்றி இந்த 5 மாநிலங்களிலும் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளிவீசவும் தயாராக உள்ளனர் காங்கிரஸார்.

ராகுல் காந்தி, கார்கே
ராகுல் காந்தி, கார்கே

தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் இப்போதே காங்கிரஸ் அலை வீசுவதாக சொல்லப்படுகிறது. இதில் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளும் சேர்ந்துகொண்டால் நிச்சயமாக அம்மாநிலம் ‘கை’ வசமாகும் வாய்ப்புப் பிரகாசம்.

அதேபோல ராஜஸ்தான், சத்தீஸ்கர் என ஏதாவது ஒரு மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்தாலும் அது காங்கிரஸுக்கு கூடுதல் பலம்தான். இதற்கெல்லாம் முக்கிய ரோலாக இருக்கப்போவது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஸ்கோர் செய்துவிட்டால், அது மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற பதற்றம் இப்போது பாஜகவை தொற்றிக்கொண்டுவிட்டது. இதனால்தான் பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு சிலிண்டர் விலையில் 200 ரூபாயை குறைத்திருக்கிறார்கள். அடுத்ததாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் திட்டமும் மத்திய அரசின் வசம் உள்ளதாகச் சொல்கிறார்கள்.

நெருக்கடி கொடுக்கும் ‘இந்தியா கூட்டணி’

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணையும் என்று பாஜகவுக்கு இறுதி வரைக்குமே நம்பிக்கையே இல்லை. ஏனென்றால் காங்கிரஸ் என்றாலே காததூரம் ஓடிய கேஜ்ரிவால், மம்தா, அகிலேஷ் போன்றோரெல்லாம் இப்போது ஓரணியில் சங்கமித்துள்ளார்கள்.

வெளிப்படையாக “இது ஊழல் கூட்டணி, உதவாத கூட்டணி, ஒன்றுமே செய்யமுடியாத கூட்டணி” என்று பிரதமர் மோடி பேசினாலும், உள்ளுக்குள் கொஞ்சம் உதறலும் இருக்கத்தான் செய்கிறது. இதனால்தான் எதிர்க்கட்சிகள் மீதான மத்திய ஏஜென்சிகளின் நடவடிக்கைகள் இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. கூட்டணியிலிருந்து கட்சிகளைப் பிரித்துவிடும் வேலை ஒருபக்கம் நடந்தாலும், கட்சிகளையே பிரிக்கும் ‘அஜித் பவார் பார்முலா’ வேலைகளையும் பாஜக முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

பாஜக மீது ஊழல் குற்றச்சாட்டுகள், குடும்ப அரசியல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடிவதில்லை. அது மக்களிடம் எடுபடுவதுமில்லை. எனவேதான் அவர்கள் தற்போது விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற மக்களின் அடிப்படையான பிரச்சினைகளை கையில் எடுத்துள்ளனர். இதனையொட்டியே ‘இந்தியா கூட்டணி’யின் தேர்தல் அறிக்கையும் தயாராகும் எனச் சொல்லப்படுகிறது.

அதில் சிலிண்டர் விலை ரூ.500, பெண்களுக்கு உதவித்தொகை, விவசாயிகளுக்கு உதவித்தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி வரி குறைப்பு, வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என மக்கள் நேரடியாகப் பயன்பெறும் பல்வேறு விஷயங்கள் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்தியா கூட்டணியை சிறிய அளவுக்கேனும் உடைக்கலாம், அதற்கான சில வாய்ப்புகளும் உள்ளன. ஆனால், அதன் குரலை முடக்குவது அத்தனை சுலபம் இல்லை. எனவே, இதனையெல்லாம் சமாளிக்கவே பாஜக இப்போது முதற்கட்டமாக சமையல் எரிவாயு விலையைக் குறைத்துள்ளது. அடுத்தடுத்த கட்டமாக பாஜக இன்னும் பல அறிவிப்புகளை வெளியிடும் என்றும் சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகலாம் என்று மோடியும், பாஜகவும் முழுமையாக நம்புகிறது. ஆனால் அந்த கனவில் இந்தியா கூட்டணி கல்லெறிந்துள்ளது. இந்தியா கூட்டணியால் பாஜக முகாமில் பதற்றம் தெரிவதை அவர்களின் நடவடிக்கைகளிலிருந்தே பார்க்க முடிகிறது.

2024 மக்களவைத் தேர்தலை கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் எதிர்கொள்ள இந்தியா கூட்டணி முடிவுசெய்துள்ளது. எனவே, அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட ஆயத்தமாகிவிட்டது பாஜக. அதன் முதல் அஸ்திரம்தான் சிலிண்டர் விலை குறைப்பு. இந்தியா கூட்டணி தயவால் இந்திய மக்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in