சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் அமெரிக்காவில் கைது: பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலைக்கு மூளையாக செயல்பட்ட கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி ப்ரார் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உறுதிப்படுத்தியுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பகவந்த் மான், "இன்று காலை உறுதிப்படுத்தப்பட்ட ஒரு செய்தி உள்ளது. கனடாவில் உள்ள ஒரு பெரிய கும்பலை சேர்ந்த கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை மாநிலத் தலைவராக நான் உங்களுக்குச் சொல்கிறேன். பஞ்சாபில் இந்த கேங்க்ஸ்டர் கலாச்சாரம் விரைவில் முடிவுக்கு வரும். அவர்கள் நாட்டிற்கு வெளியில் உள்ளார்கள், அதனால்தான் நாங்கள் சேனல் வழியாக செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சமீபத்தில், உள்துறை அமைச்சகம் மூலம், கோலி பிராருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பினோம். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் பெரிய கொலை வழக்குகளுக்குப் பின்னால் இருக்கிறார், சட்டத்தின்படி அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்”என்று கூறினார்.

மே மாதம் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலா கொல்லப்பட்டதற்கு கனடாவைச் சேர்ந்த சதீந்தர்ஜித் சிங் என்ற கோல்டி ப்ரார் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலைச் சேர்ந்த கோல்டி ப்ராருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியது. இது பஞ்சாப் காவல்துறையால் சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு அனுப்பப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in