மகிழ்ச்சியான தலைவர்களைப் பார்ப்பதே அரிது!

- நிதின் கட்கரி நகைச்சுவைப் பேச்சு
நிதின் கட்கரிகோப்புப் படம்

மகிழ்ச்சியான தலைவர்களைப் பார்ப்பதே அரிது! - நிதின் கட்கரி நகைச்சுவைப் பேச்சு

‘அரசியலில் தங்களுடைய அதிகாரம், எதிர்காலம் குறித்து எப்போதும் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதால், மகிழ்ச்சியான அரசியல்வாதிகளைப் பார்ப்பதே அரிது’ என்று நகைச்சுவையாகப் பேசியிருக்கிறார் மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. பாஜக முதல்வர்கள் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், அவரது பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

‘நாடாளுமன்ற அமைப்புமுறை - மக்களுடைய எதிர்பார்ப்புகள்’ என்ற தலைப்பில், ஜெய்ப்பூரில் நேற்று (செப்.13) நடந்த கருத்தரங்கில் நிதின் கட்கரி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மனம்திறந்து சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

“சட்டமன்ற உறுப்பினர்கள் கவலைப்படுகிறார்கள் - அமைச்சராக முடியவில்லையே என்று. அமைச்சர்கள் கவலைப்படுகிறார்கள் - நல்ல துறை நமக்கு ஒதுக்கப்படவில்லையே என்று. நல்ல துறைகள் கிடைத்தவர்கள் கவலைப்படுகிறார்கள் - முதலமைச்சர் பதவி கிடைக்காமல் போய்விட்டதே என்று. முதலமைச்சர்கள் கவலைப்படுகிறார்கள் - இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பதவியில் விட்டுவைப்பார்கள் என்று” என்று அவர் பேசியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் வாய்விட்டுச் சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியல் விமர்சகர் சரத் ஜோஷி சொல்வார், ‘மாநிலத்தில் உருப்படியாக எதையும் செய்யாத அரசியல்வாதியை டெல்லிக்கு அனுப்பிவிடுவார்கள். டெல்லியிலும் பயன்படாதவர்களை மாநில ஆளுநர்களாக்கிவிடுவார்கள். மாநில ஆளுநர்களாக முடியாதவர்களை வெளிநாடுகளுக்குத் தூதர்களாக நியமித்துவிடுவார்கள்’ என்று. பாஜகவின் தலைவராக நான் பதவி வகித்த காலத்தில், கவலையேபடாத ஒரு அரசியல்வாதியைக்கூட சந்தித்ததில்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பத்திரிகையாளர் என்னிடம் கேட்டார். எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்தாலே மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றேன்.

அரசியலும் கிரிக்கெட் விளையாட்டைப் போலத்தான். அதிலும் ஒரு நாள் கிரிக்கெட்டைப் போல, தொடர்ந்து திறமையாகச் செயல்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஒருமுறை பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்தலில் தோற்றுவிட்டேன். இப்போதைப்போல பாஜக அப்போது பலம் வாய்ந்த கட்சி அல்ல. அப்போது என்னைச் சந்தித்த காங்கிரஸ் நண்பர், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துகொள்ள அழைத்தார். வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும். ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறி அவருடைய அழைப்பை நிராகரித்துவிட்டேன்” என்றார்.

நிதின் கட்கரி பாஜகவை மறைமுகமாக விமர்சிப்பது இது முதல் முறை அல்ல. அவர் இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் இதைச் செய்திருக்கிறார். அவரது வெளிப்படையான பேச்சுக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்தியிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு!

Related Stories

No stories found.