காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அணிதிரளும் ‘ஜி-23’ தலைவர்கள்!

காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அணிதிரளும் ‘ஜி-23’ தலைவர்கள்!

5 மாநிலத் தேர்தலில் கிடைத்த படுதோல்வியால் அதிருப்தி

ஐந்து மாநிலத் தேர்தல்களில் படுதோல்வியடைந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் பூசல் தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும்; உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2020 ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய ஜி-23 தலைவர்களில் பலர், சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள்.

கபில் சிபல், மணீஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் வீட்டில் இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். இவர்களில் மூத்த தலைவரான ஆனந்த் சர்மாவும் கலந்துகொள்வார் எனச் செய்திகள் வெளியாகின.

உத்தர பிரதேசத்தில் சூறாவளியாகப் பிரச்சாரம் செய்த பிரியங்கா காந்தியின் முயற்சிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. அம்மாநிலத்தில் வாக்கு சதவீதமும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. உத்தர பிரதேசம், மணிப்பூரில் தோற்றதில் கூட காங்கிரஸ்காரர்களுக்குப் பெரிய வருத்தம் இல்லை. உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையேதான் போட்டி இருந்தது. கடந்த தேர்தலில் மணிப்பூரை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்ட காங்கிரஸ் அதை மீட்க பெரிய முயற்சிகளில் இறங்கவே இல்லை.

சித்து - அமரீந்தர் சிங் மோதல் உள்ளிட்ட காரணங்களால் பஞ்சாபில் ஆட்சியை இழந்தது, உத்தராகண்டிலும், கோவாவிலும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு ஒப்பீட்டளவில் பலவீனமாக இருந்த பாஜக அரசுகளை வீழ்த்த முடியாமல் போனதுதான் அவர்களைக் கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது.

காங்கிரஸுக்குக் கிடைத்திருக்கும் படுதோல்வி குறித்த தங்கள் விமர்சனங்களைப் பகிரங்கமாகவே அக்கட்சித் தலைவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர், “வெற்றி தேவையென்றால் மாற்றம் தவிர்க்க முடியாதது” என ட்வீட் செய்திருக்கிறார்.

எனினும், இந்த நிலையிலும் ரொம்பவே நிதானமான அணுகுமுறையைத்தான் காங்கிரஸ் தலைமையும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமான தலைவர்களும் வெளிப்படுத்துகின்றனர். “கட்சியின் எதிர்பார்ப்புக்கு மாறாகத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கின்றன. மக்களின் ஆசியைப் பெறத் தவறியதை ஒப்புக்கொள்கிறோம். காங்கிரஸ் செயற்குழுவை சீக்கிரம் கூட்டி, தேர்தல் முடிவுகல் குறித்து சுயபரிசோதனை செய்ய சோனியா காந்தி முடிவெடுத்திருக்கிறார்” என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியிருக்கிறார்.

எனினும், இந்த வார்த்தைகள் ஜி-23 தலைவர்கள் மத்தியில் எந்த வரவேற்பையும் பெறவில்லை. 2020 பிஹார் தேர்தலில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் அதிகத் தொகுதிகளைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி, பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்தது. அந்தத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் வென்று முதல்வராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டதே காங்கிரஸின் இந்தப் பிடிவாதப் போக்கால்தான் என விமர்சனங்கள் எழுந்தன.

அந்தத் தேர்தலுக்குப் பிறகு, ஒரு குழு அமைக்கப்பட்டு தோல்வி குறித்து ஆராயப்படும் என்று காங்கிரஸ் தலைமை சொன்னது. எனினும், அதனால் ஒரு பயனும் இல்லை என்பதை அக்கட்சிக்குக் கிடைத்துவரும் தொடர் தோல்விகள் உணர்த்துகின்றன. அதனால்தான், காங்கிரஸ் தலைமை எடுக்கும் முயற்சிகளால் ஒரு மாற்றமும் நிகழ்வில்லை என்று அதிருப்தி தெரிவிக்கிறார்கள் ஜி-23 தலைவர்கள்.

சோனியா காந்தி குடும்பத்தினரைத் தலைமைப் பொறுப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்று எழுந்திருக்கும் குரல்களை, சோனியா குடும்பத்து விசுவாசிகள் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். அந்தக் குடும்பம் இல்லையென்றால் காங்கிரஸால் நீடித்திருக்க முடியாது என்று கூறியிருக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், “அதிகாரப் பசி கொண்டவர்கள் கட்சியைவிட்டு வெளியேறிவிடலாம். அதிகாரத்தில் ஆசை இல்லாத எங்களைப் போன்றவர்கள் சோனியா காந்தி குடும்பத்துடன் இருப்போம்” என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளாகவே, கட்சியைவிட்டு வெளியேற விரும்புபவர்கள் வெளியேறலாம் என்ற விட்டேத்தியான நிலைப்பாட்டில் ராகுல் காந்தி இருக்கிறார். சோனியா காந்தியோ இதுபோன்ற சிக்கல்களுக்கு முகங்கொடுக்கிறாரா என்றே தெளிவாகத் தெரியவில்லை. மக்களிடம் செல்வாக்கு பெற்ற மாநிலக் காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைமையால் ஒழிக்கப்பட்டதன் பலனை, பல்வேறு மாநிலங்களில் இன்றுவரை காங்கிரஸ் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. அதைச் சொல்லிச் சொல்லியே பாஜகவினரும், பாஜக ஆதரவு ஊடகங்களும் காங்கிரஸை மேலும் மேலும் பலவீனப்படுத்திவருகின்றனர்.

“மாற்றங்கள் நடக்காவிட்டால், இன்னும் 50 வருடங்களுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டியிருக்கும்” என்று ஏறத்தாழ சாபமே கொடுத்திருந்தார் குலாம் நபி ஆசாத். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சுதாரிக்காவிட்டால் குலாம் நபி சொன்னது நடந்தே தீரும்!

Related Stories

No stories found.