மீண்டும் தொடங்கியது ஜி-23 தலைவர்கள் கூட்டம்!

24 மணி நேரத்தில் இரண்டாவது சந்திப்பு இது
மீண்டும் தொடங்கியது ஜி-23 தலைவர்கள் கூட்டம்!
நேற்று நடந்த ஜி-23 கூட்டத்தில் பங்கேற்க வந்த சசி தரூர்

காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி நிலைப்பாட்டில் இருக்கும் ஜி-23 தலைவர்களின் கூட்டம், டெல்லியில் உள்ள குலாம் நபி ஆசாத் இல்லத்தில் இன்று மாலை 7 மணி அளவில் தொடங்கியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் ஜி-23 தலைவர்கள் சந்தித்துப் பேசும் இரண்டாவது கூட்டம் இது. நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்விக்குப் பின்னர், கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள், அடுத்து நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியை வலுப்படுத்துவது எப்படி என்பன உள்ளிட்டவை பற்றி இந்தத் தலைவர்கள் ஆலோசித்துவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும் என்றும், உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கட்சித் தலைமைக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய குலாம் நபி ஆசாத், கபில் சிபல், மணீஷ் திவாரி, ஆனந்த் சர்மா, பூபேந்திர சிங் ஹூடா, ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட 23 தலைவர்கள் ‘ஜி-23’ தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

நேற்று குலாம் நபி ஆசாத் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் ஜி-23 தலைவர்கள் கூட்டத்தில் அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பிரணீத் கவுர் (கேப்டன் அமரீந்தர் சிங்கின் மனைவி), குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலா (2017-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்) போன்ற தலைவர்கள் என 18 பேர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், ஒருங்கிணைந்த, அனைவரையும் உள்ளடக்கிய தலைமை வேண்டும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து ஒரு அரசியல் தளத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹூடா, இன்று ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில் மீண்டும் கூடியிருக்கும் ஜி-23 தலைவர்கள் அடுத்து என்ன திட்டம் வகுப்பார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in