கமல்ஹாசனின் அரசியல் கனவு என்னவாகும்?

காங்கிரஸில் கரைப்பாரா... திமுகவுடன் கைகோப்பாரா?
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அவருக்கு உதவியதோ இல்லையோ, கமல்ஹாசனுக்கு கைகொடுத்திருக்கிறது. டெல்லி யாத்திரையிலும், செங்கோட்டை கூட்டத்திலும் பங்கேற்ற சூட்டில், திமுக முகாமுக்குள் கமல் கால்பதித்திருக்கிறார்.

தனிக்கட்சி கண்ட கமல்ஹாசன் அடுத்தடுத்த தேர்தல்களில் சோபிக்காத சூழலில், அவர் எடுத்திருக்கும் புதிய நகர்வு அவரைத் தேர்ந்த அரசியல்வாதியாக முன்னிறுத்தி இருக்கிறது. அரசியல்வாதியாக அவ்வளவுதான் என்றவர்கள் முகத்தில் கரிபூசி மீண்டும் எழுந்திருக்கிறார் கமல். இதற்காக. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களுடன் கைகோக்க மாட்டோம் என்ற தனது முந்தைய பிரகடனத்தையும் சமரசம் செய்யுமளவுக்கு அவர் வந்திருக்கிறார். காரணம், ஓட்டரசியல்!

10 ஆண்டுகளுக்கு முன்னர் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் அரசியல் ரூபம் கண்ட கமலின் அரசியல் விஸ்வரூபத்துக்கு இனியேனும் வாய்ப்பிருக்கிறதா? அடுத்து அவரது அரசியல் பாய்ச்சல் எப்படியிருக்கும்? தனியாவர்த்தனமா அல்லது சிரஞ்சீவி போல காங்கிரஸில் கட்சியைக் கரைப்பாரா? திமுகவுக்கு பல்லக்கு தூக்கி இதர அரசியல் கணக்குகளில் திருப்தி அடைவாரா? மய்யத்தார் தொடங்கி மக்கள் வரை மனதில் குடிகொண்டிருக்கும் கேள்விகள் இவை.

ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன்
ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன்

ரஜினி - கமல் அரசியல் ஆசைகள்

6 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், சினிமாவில் சாதிக்காதது இல்லை. மெய்யாலுமே உலக நாயகன் என்ற பட்டத்துக்கு உரியவரான கமல்ஹாசன், சினிமாவுக்கு அப்பால் அரசியல் முடிவை எடுத்ததுதான் இன்று வரை அவரது தீவிர ரசிகர்களின் மத்தியில் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

ரஜினியும் கமலும் போட்டியிட்டு வளர்ந்த காலகட்டத்தில், திரைப்படங்களின் வெற்றிக்காக ரசிகர்கள் மத்தியில் அரசியல் எதிர்பார்ப்புகளை தூண்டி விடுபவராக ரஜினி இருந்தார். கமல் தவறியும் அந்தத் தவறை செய்யவில்லை. “ரஜினி அரசியல் கட்சி தொடங்கினால் அவரை ஆதரிப்பீர்களா?” என்ற கேள்வியை ஒருகாலத்தில் எதிர்கொண்ட கமல், காலத்தின் கோலத்தில் அதுவே உல்டாவாக அரங்கேறும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தமிழக மக்கள் வெற்றி வாய்ப்பை தங்கத் தாம்பாளத்தில் வைத்து தந்தால் மட்டுமே அரசியிலில் அடியெடுப்பேன் என்பதுபோல ஏக பிகு செய்தார் ரஜினிகாந்த். கமல்ஹாசனோ, “18 வயதான எல்லோரும் ஏற்கெனவே அரசியலில் இருக்கிறோம். ஆனால், நேரடி அரசியல் எனக்கு ஆகாது” என வெளிப்படையாக மறுத்தார். அவரது வாசிப்பும், கலையார்வமும், அறிவுஜீவிகளுடனான சிநேகமும் கமலுக்கு, அரசியல் உரையாடல்களை அதிகம் தந்திருக்கின்றன.

சககலைஞராக கருணாநிதியுடன் சிநேகம் பாராட்டிய கமல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முரண்பட வேண்டியதாயிற்று. சென்னை பெருவெள்ளத்தின்போது அரசின் பொறுப்பின்மையை சுட்டிக்காட்டியதில் ஜெயலலிதா கொதிப்படைந்தார். ’அன்புத்தங்கை’ திரைப்படத்தின் நடன அசைவுகளுக்காக தன்னை ஆட்டுவித்த கமலுக்கு, அரசியல் ஆட்டத்தில் ஜெயலலிதா அதிரடியாக பதில் சொன்னார்.

இடைத்தேர்தல் பிரச்சார களத்தில்
இடைத்தேர்தல் பிரச்சார களத்தில்

கமலின் விஸ்வரூபம்

அண்மையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் வரை ‘அம்மையார் கொடுத்த குடைச்சல்கள்’ என ஜெயலலிதா தந்த காயத்தை மறக்காதிருந்தார் கமல்ஹாசன். அந்த அளவுக்கு நேரடி அரசியல் களம் நோக்கி கமலை, அரசியல் அதிகாரங்கள் நெட்டித்தள்ளின. ஜெயலலிதா மறைவு வரை அது நடந்தேறவில்லை. அவர் மறைந்து, கலைஞரும் முடங்கிய காலத்திலும், ட்விட்டர் வாயிலாக அரசியலில் ஆழம் பார்த்தார் கமல். ஊழல்களுக்கு எதிரான அரசியல்பாதை அவருக்கு அப்போதுதான் புலப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோர் முன்னிலையில் மதுரை தமுக்கத்தில் ’மக்கள் நீதி மய்யம்’ கட்சியை ஆரம்பித்தார்.

ரசிகர்களாக இருந்து தொண்டர்களாக பரிணமித்தவர்கள் உற்சாகம் கொண்டார்கள். கமலின் திரைப்பின்னணி காரணமாக, ஊடக வெளிச்சத்தில் அதிகம் விழுந்தார். அதன் ஊடாக தன்னைப் பற்றிய பிம்பத்தை பிரம்மாண்டமாக கணக்கிட்டார். அந்த அடிப்படையில் திமுகவுடன் கூட்டணிக்கு முயன்றவர், அதிக இடங்களை எதிர்பார்த்ததில் தொடக்கத்திலேயே நிராகரிக்கப்பட்டார். அது முதல் திமுகவையும் கமல் வெகுவாக எதிர்க்க ஆரம்பித்தார்.

மக்களவைத் தேர்தலை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது மநீம. தலைவரான கமல் ஜெயித்திருந்தால்கூட, கட்சி அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கும். கோவை தெற்கில் வானதி சீனிவாசனிடம் கமல் வெற்றியை பறிகொடுத்ததில், மநீம கட்சி நிர்வாகிகள் தெறித்தோடினார்கள். பலதரப்பிலும் கமல்ஹாசன் இனி அவ்வளவுதான் என்றார்கள். ’தப்பித்தேன்’ என்று ரஜினி பெருமூச்சு விட்டார். ஆனல், தோல்வி முகத்திலிருந்து மீண்டெழும்போதுதான் ஓர் உண்மையான அரசியல்வாதி திடம் கொள்கிறான் என்பதற்கு கமல் பாடமானார்.

‘விக்ரம்’ கமல்
‘விக்ரம்’ கமல்

மீட்டெடுத்த விக்ரம் வெற்றி

தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளியான கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் அவரே எதிர்பாராத அதிரிபுதிரி வெற்றியை ஈட்டியது. கலையார்வத்தின் கோளாறில் வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்து, விபரீதமான தோல்விகளுக்கு ஆளாவது அவரது திரைப்பயணத்தில் அடிக்கடி நடக்கும். அரசியல் தோல்வி முகத்தின் மத்தியில், ‘விக்ரம்’ படமும் அப்படி தோற்றிருப்பின் கமல் மேலும் சோர்ந்திருப்பார்.

‘விக்ரம்’ வெற்றியை பிடித்துக்கொண்டு மேலேறினார் கமல். அரசியலின் அடுத்த பாய்ச்சலுக்கும் தயாரானார். திரைவர்த்தகத்தில் உதயநிதியுடனான தொடர்பு, அரசியலில் ராகுல்காந்தியின் நட்பு ஆகியவை அதற்கு வழி செய்தன. தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலுமே புதிய வேகம் காட்டுகிறார். அவரது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம், அதன் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் ஏராளமான படங்களை தயாரிக்கிறது.

அரசியலைப் பொறுத்தளவில் அவரது கணக்குகள் சற்று மாறி இருக்கின்றன. நிதானம் கூடியிருக்கிறது. திமுகவுக்கு பல்லக்கு தூக்குவதா என கமல் தயங்குவதாக தெரியவில்லை. ஆனால், திமுக தரப்பிலும், கூட்டணிக்குள்ளாகவும் நீடிக்கும் கணக்குகள் கமலுக்கான கசப்புகளை தரவிருக்கின்றன.

விசிக உடனான அரசியல் உறவில் புளித்திருக்கும் திமுக தலைவர்கள் சிலர், கமல்ஹாசனை அரவணைப்பதன் மூலம் விசிகவை வெறுப்பேற்றி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் அழைக்கப்பட்டதை விசிகவினர் விமர்சித்து வருகின்றனர். திருமாவளவனையோ கூட்டணியின் இதர தலைவர்களையோ அழைக்காது கமல்ஹாசனை திமுக ஊதிப்பெருக்குவது அவர்களுக்கு அதிருப்தி தந்தது.

ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியில்..
ஸ்டாலின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியில்..

கைகொடுக்காத வசீகரம்

கமலால் ஏன் அரசியலில் சோபிக்க முடியவில்லை என்பது அரசியல் களத்திலும், திரைத்துறையிலும் நீண்ட விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. விஜய் போன்று அரசியல் ஆசை கொண்டோர் தரப்பில், கமல் கற்ற பாடங்களை அதிகம் ஆராய்ந்து வருகின்றனர். உண்மையில், கொள்கை அடிப்படையிலே கமல் தரப்பின் தடுமாற்றம் தொடங்கியது. கமல் என்றில்லை, சினிமா வசீகரத்தை முன்வைத்து அரசியலில் குதிக்கும் எல்லோருக்கும் எழும் பிரச்சினையே கமலையும் அலைக்கழிக்கிறது.

எம்ஜியார் கட்சி ஆரம்பித்தபோது, அண்ணாயிசமே அதிமுகவின் கொள்கை என்றார். அண்ணாயிசம் என்னவென்று எவரும் கேட்கவில்லை; எம்ஜியாரும் விளக்கவில்லை. அக்காலத்தில் அவரது வசீகம் அப்படியான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் தற்போது காலம் மாறியிருக்கிறது. சமூக ஊடக காலத்தில் சினிமா முதல் அரசியல் வரை மேலிடங்களின் சகல மாய்மாலங்களும் சாமானியர் வரை எளிதில் அம்பலமாகி விடுகிறது. சினிமா பிரபலங்களின் வசீகரத்தை திரையோடு மக்கள் நிறுத்திக்கொண்டு விடுகிறார்கள். அல்லது கூட்டங்களில் கூடி தரிசிப்பதோடு முடித்துக்கொள்கிறார்கள்.

’இடது வலது சாயாது மய்யமாக நிற்பது’, ’ஊழல் ஒழிப்பு’ ஆகியவை கமலின் ஆரம்பகட்ட தீவிர கொள்கைகளாக இருந்தன. தற்போது திமுக பக்கம் சாய்ந்ததில் மேற்படி கொள்கைகளும் குடைசாய்ந்திருக்கின்றன. ட்விட்டரில் தெளியவைத்து குழப்பி அடிக்கும் வாதங்களை தற்போதைக்கு குறைத்திருக்கிறார் கமல். இப்போதைக்கு சரிவிலிருந்து கட்சியை காப்பாற்றும் நோக்கமே பிரதானமாக இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்

காங்கிரஸில் கரைப்பும், திமுகவுக்கு பல்லக்கும்

கூட்டணியில் இருப்பாரா அல்லது காங்கிரஸில் கட்சியை கரைப்பாரா என்பது மய்யத்தின் தொண்டர்கள் மத்தியிலான அடுத்த கேள்வியாக நீடிக்கிறது. அண்மையில் கட்சியின் இணையதளத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியானதன் மர்மம் இன்னும் விளங்கியபாடில்லை.

கமலைப்பொறுத்தவரை, இன்றைய சூழலில் இப்போதைக்கு மட்டுமே யோசிக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்கள் குறித்து அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவிலிருக்கிறார். அனைவரும் எதிர்பார்த்த அரசியல் வெற்றிடம் தமிழக அரசியல் களத்தில் இன்னமும் மறைந்திருப்பதாகவே கமல் தரப்பில் கருதுகிறார்கள். அதுவரை அவர் திமுகவுக்கு பல்லக்கு தூக்க நேரிடலாம்.

’தோற்றறிந்தால் போராளி; முடிவெடுத்தால் யாம் முதல்வர்’ என்பது கமலின் ட்விட்டர் திருவாசகங்களில் ஒன்று. கமலால் இனி தமிழகத்தின் முதல்வராக முடியாது போகலாம். ஆனால், நிச்சயம் எம்பி-யாக மாறி நாடாளுமன்றத்தையும், தேசிய அரசியலையும் போராளியாக தெறிக்கவிடும் முடிவில் இருக்கிறார். அப்படி 70 வயதில் எம்பி-யாகும் வாய்ப்புள்ள கமல் அதன் பின்னரே, மாநில அரசியல் களத்தில் மநீம கட்சியை அடுத்தக் கட்டத்துக்கு வளர்க்க வேண்டியிருக்கும். கட்சியின் தொண்டர்களாக பெரும்பாலும் ரசிகர்களே இருப்பதால், இதர கட்சித் தொண்டர்கள் போலன்றி கடைசிவரை கமலை பின்தொடர தயாராக இருக்கிறார்கள்.

காலம் கடந்தும் கமலின் திரைப்படைப்புகள் பேசப்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோல அவரது அரசியல் படைப்பான மநீம கட்சியின் எதிர்காலமும் அமைய வேண்டுமே என்பதுதான் கமல் ரசிகர்களின் இப்போதைய கவலையாக நீடிக்கிறது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in