மோடி மற்றும் பாஜகவுக்கு எதிராக ’இந்தியா கூட்டணி’ என்று புறப்பட்ட எதிர்க்கட்சிகள், கடைசியில் தத்தம் தலைகளில் பரஸ்பரம் கொள்ளிக்கட்டையால் சொரிந்துகொண்டிருக்கின்றன.
பாஜக மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் இந்தியா கூட்டணியை கட்டமைத்தவர்கள், தங்களின் சுயநலம் மற்றும் ஈகோ காரணமாக, பாஜக எதிர்பார்க்கும் திடமான எதிர்க்கட்சி இல்லாத இந்தியா உருவாகவும் வழி செய்திருக்கிறார்கள்.
பீகாரில் ஆரம்பித்த புகைச்சல்
பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைப்பதில், நிதிஷ் குமாருக்கு முன்பே மம்தா பானர்ஜி கே.சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் முயற்சித்து தோற்றிருந்தனர். ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே நிதிஷ் குமார் ஒருங்கிணைத்த எதிர்க்கட்சிகள் கூட்டணி ஒரே குடைக்குள் இணைந்தது.
நிதிஷ் குமாரின் தேர்ந்த அரசியல் அனுபவம் மட்டுமன்றி, அப்போதைக்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் குடைச்சலும் எதிர்க்கட்சிகளை தோள்சேர வைத்தன. மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றைக் கோட்டில் இணைந்தாலும், எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு ஆளாளுக்கு ஒரு தனிக்கணக்கு இருந்தது. கூட்டணிக்கு பிள்ளையார் சுழியிட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் கணக்கு ஈடேறாததில், பின்னர் கூட்டணி குப்புற விழ அதுவே வித்திட்டது.
நிதிஷ் குமாருக்கான நியாயங்கள்
சிறந்த சோஷலிஸ்டாக தன்னை முன்னிறுத்தும் நிதிஷ் குமார், அரசியல் களத்தில் அடித்த பல்டிகள் அகில இந்திய புகழ் வாய்ந்தவை. தன்னை மாநிலத்தின் முதல்வராக தக்க வைத்துக்கொள்ள கடந்த 15 ஆண்டுகளில் பாஜக மற்றும் ஆர்ஜேடி இடையே கூட்டணிக்காக 5 முறை கூடு பாய்ந்திருக்கிறார். அதிக முறை பீகார் முதல்வராக இருந்தவர் என்ற சாதனை சாத்தியமானதும் அடுத்ததாக பிரதமர் நாற்காலி மீது கண்வைத்தார் நிதிஷ். அதற்காக பாஜக எதிர்ப்பு என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினார்.
குஜராத்திலிருந்து கிளம்பிய மோடி பிரதமராகும்போது இந்தியாவின் இதய மாநிலங்களின் மத்தியிலிருந்து பிரதமராக தான் கிளம்புவதன் சாத்தியங்களை நிதிஷ் அலசி ஆராய்ந்தார். ஆனால், அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் இந்தியா கூட்டணி தயங்கியது. அதனால் நிதிஷ் குமார் முகாம் மாற முடிவு செய்துவிட்டார். நிதிஷ் குமார் மட்டுமன்றி மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், சரத் பவார் என ஆளாளுக்கு, இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக தங்களை முன்னிறுத்த ஆவலாதி கொண்டிருந்தனர். பிரதான தேசியக் கட்சியான காங்கிரஸ் முறுவலுடன் இதனை வேடிக்கை பார்த்தது.
நிதிஷ் குமாரின் நோக்கம் அறிந்த மம்தா, கேஜ்ரிவால் போன்ற தலைவர்கள், காங்கிரஸ் கட்சிக்கு முன்னதாக சுதாரித்தார்கள். எனவே கார்கே மறுதலிப்பார் என அறிந்தே அவரை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து நிதிஷை வெறுப்பேற்றினார்கள். அடுத்தபடியாக, இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்புக்கு நிதிஷ் ஆசைப்பட்டபோதும் அதனை முதலில் மறுத்தார்கள். தனக்கான அதிருப்தியை அடையாளம் கண்டதும், அந்த முகாமிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்த நிதிஷ், தாமதமாக தகைந்த ஒருங்கிணைப்பாளர் பொறுப்பையும் மறுத்தார்.
பெரியண்ணனின் பொறுப்பற்ற போக்கு
வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியை தகர்த்த கதையாய், பிராந்திய எதிர்க்கட்சிகளின் முயற்சியால் திரண்ட இந்தியா கூட்டணியை பயன்படுத்திக்கொள்வதில் காங்கிரஸ் வழக்கம்போல சொதப்பி வைத்தது. பிராந்திய கட்சிகள் ஆளாளுக்கு பிரதமர் நாற்காலியில் கண்வைத்த போதும், அதற்கான தகுதி தனக்கு மட்டுமே இருப்பதை காங்கிரஸ் நன்றாகவே உணர்ந்திருந்தது. ஆனபோதும் இந்தியா கூட்டணியின் பெயரில் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்வதை விட, கூட்டணி கட்சிகளை சதாய்ப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதால், மாநிலத்தில் தங்களின் அரசியல் இருப்பு என்னாகுமோ என்ற பிராந்திய கட்சிகளின் அச்சத்துக்கு காங்கிரஸின் போக்கு அர்த்தம் சேர்த்தது.
இந்தியா கூட்டணியின் பிராந்திய கட்சிகளில் பெரும்பாலானவை, மாநில அளவில் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸையும் ஒரே தராசில் வைத்தே அதுவரை அரசியல் லாவணி பாடி வந்தவை. மாநில அளவில் காங்கிரஸ் உடன் விரோதம் பாராட்டும் பிராந்திய கட்சிகளின் நிர்வாகிகளை, மக்களவைத் தேர்தலுக்காக தோள்சேரும் நெருக்கடியை இந்தியா கூட்டணி ஏற்படுத்தியது. அத்தகைய அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வதில் காங்கிரஸ் தோற்றது. 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் நடந்தபோதே, இந்தியா கூட்டணியாக அவற்றை எதிர்கொள்ள காங்கிரஸ் மறுத்தது. கூட்டணி தொகுதி பேரத்திலும் வஞ்சனை செய்தது.
கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக்கு ஆசை காட்டி மோசம் செய்தது காங்கிரஸ். அதே போன்று ம.பி மற்றும் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல்களில் சிபிஎம் கட்சியின் கழுத்தறுத்தது. ம.பி-யில், இந்தியா கூட்டணித் தலைவர்களின் முடிவுகளை மறுதலித்து காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தன்னிச்சையாக முடிவெடுத்தார். இந்தியா கூட்டணியின் சார்பில் ஏற்பாடான கூட்டத்தை தடாலடியாய் ரத்து செய்தார். அகிலேஷ் யாதவை கடைசி நேரத்தில் கழற்றிவிட்டு அவமானப்படுத்தினார். அதன் பதிலடியாய் மக்களவை கூட்டணிக்காக, உத்தர பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை அகிலேஷ் யாதவ் அலையவிடுகிறார்.
தேர்தல் நெருக்கத்தில் தனியாவர்த்தனம்
மக்களவை தேர்தலையொட்டி இந்தியா கூட்டணிக்கான ஒருமித்த பணிகள் எத்தனையோ இருக்க, ராகுல் காந்தி தலைமையில் தனியாவர்த்தனமாய் இரண்டாவது ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் முன்னெடுத்தது கூட்டணி கட்சிகளை வெறுப்பேற்றியது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூவிப்பார்த்து சோர்ந்த ஆம் ஆத்மி மற்றும் திரிணமூல் கட்சிகள் முறையே பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் தனித்து களம் காண்கின்றன. அதிலும் உச்சமாக, இந்தியா கூட்டணியின் பிரதான தலைவர்களில் ஒருவரான மம்தா பானர்ஜி, தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கான சாத்தியங்களை பார்த்துக் கொள்ளலாம் என சலிப்போடு ஒதுங்கிக்கொண்டார்.
பொறுப்பான தேசிய கட்சியாக, கூட்டணி கட்சிகள் மத்தியில் தொகுதிப் பங்கீடு, பொதுவேட்பாளர் உள்ளிட்ட ஆரோக்கியமான எதிர்க்கட்சி அரசியலை மேற்கொள்ளாது, ராகுல் காந்தியை முன்னிறுத்தி அடுத்த பாத யாத்திரையில் காங்கிரஸ் ஆர்வம் காட்டுகிறது. இதில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்கள், நடைபயணம் என்ற பெயரில் காங்கிரஸ் குறுக்குசால் ஓட்டுவதை வெறுப்போடு பார்க்கின்றன.
பாஜகவை பதறடித்த ‘இந்தியா’
இந்த வகையில் நிதிஷ் குமார் வெளிப்படையாகவும், மம்தா மற்றும் கேஜ்ரிவால் போன்றோர் கமுக்கமாகவும் இந்தியா கூட்டணியை இடித்துக்கொண்டு கிளம்பியிருக்கிறார்கள். தமிழகம் தவிர்த்து இதர மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெயரளவில் மட்டுமே இருக்கிறது. இந்த வடிவத்தில் மக்களவைத் தேர்தலை சந்திப்பது இந்தியா கூட்டணியின் நோக்கத்தை எந்த வகையிலும் ஈடேற்றாது.
கடைசியில் இந்தியா கூட்டணியின் மெனக்கிடல்கள் அனைத்தும் பாஜகவுக்கு சாதகமாகவே மாறியிருக்கின்றன. மோடி மற்றும் பாஜக எதிர்ப்பு என்பதற்கு அப்பால், உறுதியான கொள்கை மற்றும் குறைந்தபட்ச செயல்திட்டம் இல்லாதது, ஒன்றிணைந்து 5 மாநில தேர்தல்களை அணுகாதது ஆகியவற்றுடன் தத்தம் சுயநலம் மற்றும் ஈகோக்களை பகிரங்கப்படுத்தியதில், பொதுவெளியில் அதிருப்தியை சம்பாதிக்கவே இந்தியா கூட்டணி வழி செய்திருக்கிறது.
இந்தியா கூட்டணியின் ஆரம்ப அமோகம் அடுத்த சில மாதங்களில் வெகுவாய் தேய்ந்திருக்கிறது. பாட்னா முதல் அமர்விலான எதிர்க்கட்சிகளை ’போட்டோ ஷுட்’ என வெளியே கிண்டலடித்தாலும், உள்ளூர பாஜக உதறலில் இருந்தது. ’இந்தியா கூட்டணி’ என எதிர்க்கட்சிகளின் முகாம் தங்களுக்கான பெயரை அறிவித்தபோது, ’இந்தியா’ என்பதே ஒவ்வாமையாகி, ’பாரத்’ என நாட்டின் மாற்றுப் பெயரை வழங்கும் போக்குக்கு தள்ளப்பட்டது பாஜக.
இந்தியா கூட்டணி பயத்தால் தான் பல ஆண்டுகளாக கூட்டாத தேசிய ஜனநாயக கூட்டணியை கூட்டி, உடனிருக்கும் உதிரிக் கட்சிகளை ஒருமுறை சரிபார்த்துக் கொண்டது பாஜக. ஆனால், அந்த பயம் ரொம்ப நாள் நீடித்திருக்கவில்லை. எதிர்க்கட்சிகளின் எகிடு தகிடான போக்கு, 3 வட மாநிலங்களின் பெருவெற்றி, ராமர் கோயில் பிரம்மாண்டம் உள்ளிட்டவை பாஜகவுக்கு தெம்பு சேர்த்தன.
தேசத்துக்கு சேதாரம் சேர்க்கும் எதிர்க்கட்சிகள்
ஆரோக்கியமான தேசத்தின் போக்குக்கு திடமான ஆளும்கட்சி மட்டுமன்றி எதிர்க்கட்சியும் அவசியமாகிறது. அறுதிப்பெரும்பான்மை, அசுரபலம் ஆகியவற்றின் மிதப்பில் ஆளும்கட்சி தடம் புரளும்போது, தலையில் தட்டி நிதானப்படுத்த வலுவான எதிர்க்கட்சிகள் அவசியம். வாக்கு அரசியலுக்கு அப்பாலும் மக்கள் நலன் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதும், ஆளும்கட்சியை வழிப்படுத்துவதும் அவசியமாகிறது. மாறாக, தங்கள் சுயலாபத்துக்காக எதிர்க்கட்சிகள் இயங்குவது, அவர்களின் தற்போதைய இருப்பையும் காணடிக்கச் செய்துவிடும்.
எனவே, இருக்கும் சொற்ப அவகாசத்திலேனும் இந்தியா கூட்டணியின் அங்கத்தினர்கள் குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகள், மக்களவை தேர்தல் நோக்கிலும், தேசத்தின் எதிர்காலத்தை மனதில் வைத்தும், ஆரோக்கிய அரசியல் மேற்கொள்வதே தேச நலனுக்கு நல்லது. எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்துக்கும் அதுவே சரியானதாக இருக்கும்!