திமுகவின் முதன்மை முகமாகும் உதயநிதி... நெருப்பாற்றை நீந்திக் கடப்பாரா?

உதயநிதி - ஸ்டாலின்
உதயநிதி - ஸ்டாலின்

அண்மைக்காலமாக ஆட்சியிலும், கட்சியிலும் அநேக சங்கடங்களை திமுக எதிர்கொண்டு வருகிறது. இவற்றின் மத்தியில் மிகப்பெரும் சவாலாக, திமுகவின் முதன்மை முகமாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார் உதயநிதி.

தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்களை வளைக்கும் அமலாக்கத்துறை, அந்த விசாரணைகளில் கசிய விடப்படும் அதிரடி தகவல்கள், அதிமுக - பாஜக என எதிக்கட்சிகளின் பன்முனைத் தாக்குதல், சனாதன சர்ச்சையில் ’இந்தியா கூட்டணி’யின் வடக்கத்திய சகாக்கள் திமுகவிடமிருந்து விலகல் பேணுவது, பாஜக உறவை அதிமுக முறித்ததில் திமுக கூட்டணிக் கட்சிகள் மத்தியிலான ஊசலாட்டம்... இப்படி பல திசையிலும் அதிகரிக்கும் நெருக்கடிகளின் மத்தியில், சத்தமின்றி உதயநிதியின் அரசியல் எழுச்சியும் அரங்கேறி வருகிறது.

களம் கண்ட வாரிசு

திமுக போன்ற தலைமுறை கடந்த கட்சியில், தொண்டர்களைப் போலவே தலைவர்களின் குடும்பங்களிலும் அடுத்தடுத்த தலைமுறை வாரிசுகள் அரசியலுக்கு வருவதும், பொறுப்பேற்பதும் இயல்பானது. திணிப்பாகவோ, தகுதிக்கு அப்பாற்பட்டதாகவோ அவை அமையும்போது, தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களால் எளிதில் புறக்கணிப்புக்கு ஆளாவார்கள். திமுகவில் உதயநிதியின் வருகையும் தொடக்கத்தில் அதற்கான விமர்சனங்களுக்கு ஆளானது.

அரசியல் அடிச்சுவட்டில் தந்தை மு.க.ஸ்டாலின் தனது இருப்பை தக்கவைப்பதற்கு உதவிய போராட்ட களங்கள் எதுவும் உதயநிதிக்கு வாய்க்கவில்லை. வாரிசு அரசியல் என்பதற்கு அப்பால் குடும்ப அரசியல் என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கும் அளவுக்கு உதயநிதியின் அரசியல் மற்றும் அரசு அதிகார பிரவேசங்கள் அமைந்தன. திமுகவின் பிரதான தூண்களான அடுத்தக்கட்டத் தலைவர்கள் பலரும் அதனை ஜீரணிக்க முடியாது, தங்கள் வாரிசுகளுக்கும் அதிகாரத்தை கேட்டுவாங்கி திருப்தியானார்கள்.

4 ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞரணி செயலாளராக வந்தவர், 2 வருட இடைவெளியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ ஆனார். சிறிய இடைவெளியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார். இவற்றை எல்லாம் தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் செயல்பாடுகள் இருக்குமா, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் அபிமானத்தை வெல்வாரா என்பதில் திமுகவுக்கு உள்ளேயும் - வெளியேயும் கேள்விகள் தொக்கி நின்றன.

புலம் மாறும் சனாதன சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு உதயநிதியை தேசிய அளவில் சென்று சேர்த்தது. பன்முக தேசத்தின் வடக்கு - தெற்கு இடையிலான வேறுபாடுகளில் ஒன்றாக, சனாதனம் என்பதை புரிந்துகொண்டதையும் திமுக சேர்த்திருக்கிறது. தெற்கை புரிய வைக்கும் முயற்சியில், திராவிட ஆதார கொள்கைகள் தேசிய அளவில் விவாதிக்கப்படுகின்றன.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சனாதனம் என்பதை அதன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கான தர்மமாக, இறையியலாக வடக்கே பாவிக்கிறார்கள். அந்த சனாதனத்தின் பின்னே ஒழிந்திருக்கும் வருணாசிரமம், அதில் பொதிந்திருக்கும் சமூக பேதங்களால் பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து, தங்கள் கருத்தியல் போராட்டத்தை தெற்கிலிருந்து திமுக புரிய வைக்க முயற்சிக்கிறது. இவை விவாதங்களுக்கு ஆளாவதும் திமுகவின் வெற்றியாக, குறிப்பாக உதயநிதியின் வளர்ச்சிக்கு அச்சாரமாக ஆகக்கூடும்.

அதனால்தான், ’இந்தியா கூட்டணி’யில் அதிருப்தி வெடித்தபோதும் உதயநிதி தனது நிலைப்பாட்டில் தீவிரமாக இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, உயர் நீதிமன்றத்தின் குட்டு ஆகியவற்றை மீறியும், உதயநிதி திடமாக முன்னகர்கிறார். உதயநிதி ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை, அவரை ஏன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவில்லை என்றெல்லாம் வடக்கு ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. தனது வழக்கமான மந்தகாசப் புன்னகையோடு, “சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று இந்தி சேனல்களின் மைக்குகளை உதயநிதி கடந்து செல்கிறார்.

முதல்வர் முகமாகும் உதயநிதி

பெரும் போராட்டத்திலும், எதிர்ப்புகளின் மத்தியிலும் வளர்ந்த கட்சியில், உதயநிதி உள்ளே பிரவேசித்ததும் பொறுப்புகளை ஏற்றதும் வேண்டுமானால் எளிதாக நடந்திருக்கலாம். ஆனால், அவற்றை தக்கவைத்துக் கொள்வது அத்தனை எளிதானதல்ல. ’முரசொலி’யின் மொழியில் சொல்வதென்றால் அதற்கு நெருப்பாற்றில் நீந்திக் கடந்தாக வேண்டும். அதனை நோக்கிதான் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஆயத்தமாகி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க முடியாத கூட்டங்களில் அவரின் முகமாக நின்று முதல்வரின் உரையை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார் உதயநிதி. அடுத்தடுத்த கூட்டங்களில் முதல்வரின் மறுமுகமாக உதயநிதி நிற்கவும், கூட்டத்தில் இருப்பவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவும் இவை உதவக்கூடும்.

உதயநிதி அமைச்சர் பதவியை இழப்பாரா, கைதுக்கு ஆளாவாரா என்பதற்கான சாத்தியங்களை எதிர்க்கட்சிகளை காட்டிலும் திமுக தலைமை அதிகம் ஆலோசிக்கிறது. நெருப்பாற்றில் நீந்தவும் தயாராகிறார் உதயநிதி. அதில் அவர் புடம்போடப்படுவதும், திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் வெகுஜனம் மத்தியில் அவை உண்டாக்கும் தாக்கமும் உதயநிதியின் ஆயத்தங்களை அர்த்தமுள்ளதாக்கும்!

இதையும் வாசிக்கலாமே...

தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!

வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!

மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!

திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in