`இலவசங்களுக்கு தடை விதிக்கக் கூடாது'- ஆம் ஆத்மியுடன் இணைந்து போராடும் திமுக!

`இலவசங்களுக்கு தடை விதிக்கக் கூடாது'- ஆம் ஆத்மியுடன் இணைந்து போராடும் திமுக!

தேர்தலில் இலவசங்கள் வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையில் தங்களையும் இணைக்க கோரி திமுக மனு செய்துள்ளது.

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கத் தடை விதிக்கக் கோரி அஸ்வினி உமாத்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி திமுகவினர் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் இலவசத் திட்டங்களைப் போட்டிப் போட்டுக் கொண்டு அறிவிக்கும். அந்த அடிப்படையில் தேர்தல் முடிவுகளும் இருக்கும். தமிழகத்தில் இலவச கலர் டிவி, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நேரங்களில் இலவசங்களை அறிவிப்பதை நீதிமன்றம் தடை செய்தால், அது தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் தேவை என்பது வெவ்வேறாக இருக்கிறது. ஒரே திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாநில அரசுகள், அந்தந்த மாநிலத்தின் தேவைகளுக்கேற்ப திட்டங்களை அறிவிப்பார்கள் என மனுவில் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆம் ஆத்மி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் திமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in