பிரதமர் மோடி பிரமாதத் திட்டம்... மேலும் 4 நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக பிரதமர் மோடி, மேலும் நான்கு நாட்கள் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தனி அணியாக போட்டியிடும் பாஜக குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு பிரச்சார உத்திகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடியும் இம்முறை தமிழகத்திற்கு கூடுதல் கவனம் கொடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதத்தில் 2 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி, 3-வது முறையாக இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 27-ல் மீண்டும் வந்தார். அப்போது, பல்லடத்தில் நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அன்று மாலை மதுரையில் நடந்த நிகழ்ச்சியிலும், மறுநாள் தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்ற மோடி, நிறைவாக திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அதனைத் தொடர்ந்து, மார்ச் 4-ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். தொடர்ந்து, மார்ச் 18-ம் தேதி கோவையில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோவை மோடி நடத்தினார். 

இந்நிலையில், மேலும் நான்கு நாட்கள் பிரதமர்  மோடி தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஏப்ரல் 9-ல் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னையில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வினோஜ் பி.செல்வம், பால் கனகராஜ் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்கிறார். அப்போது மூன்று தொகுதிகளும் இணையும் இடத்தில் ரோடு ஷோ நடத்த இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, அதே நாளில் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சியினரை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து மறுநாள் 10-ம் தேதியும் அவர் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளை பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நீலகிரியில் ரோடு ஷோ நடத்தும் மோடி கோவையில் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். பின்னர் மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி அன்றைய தினம்  பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள்  ஏப்ரல் 14-ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமரின் இந்த அடுத்தடுத்த தமிழக பயணங்களாலும், பிரச்சார உத்திகளாலும் தமிழகத்தில் பாஜகவுக்கான செல்வாக்கு உயரும் என்றும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்றும் பாஜகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in