பொதுக்குழுவை தடுக்க சமூக விரோதிகள் திட்டம்: பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் புகார் அளித்த ஜெயக்குமார்

பொதுக்குழுவை தடுக்க சமூக விரோதிகள் திட்டம்: பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் புகார் அளித்த ஜெயக்குமார்

"சமூக விரோதிகள் பொதுக்குழு நடத்தவிடாமல் தடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் போல் இந்த முறை ஏற்படாமல் அதிக பாதுகாப்பு கேட்டு டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11-ம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் மீண்டும் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவிற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்ககோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் இன்று டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "வருகிற 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. அதனால் காவல்துறையிடம் பாதுகாப்பு கோரி டிஜிபியிடம் மனு அளித்துள்ளோம். கடந்த 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவிற்கு காவல்துறைக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது. 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் 2,665 பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் 65 எம்எல்ஏக்கள், 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேலவை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இந்த பொதுக்குழு சட்டரீதியாக நடைபெற உள்ளது. எனவே காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். சமூக விரோதிகள் பொதுக்குழு நடத்தவிடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பது குறித்து டிஜிபியிடம் எடுத்துரைத்துள்ளோம். பொதுக்குழுவிற்கு வெளியே சமூகவிரோதிகள் வரலாம். அவர்களை வராமல் தடுக்க வேண்டுமென்றும்

எதிர்தரப்பினர் (ஓபிஎஸ் ஆதரவாளர்கள்) தான் திட்டமிட்டு வருகின்றனர். நேரில் பொதுக்குழு நடத்த இயலாவிட்டால் காணொளி மூலம் பொதுக்குழு கூட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பொறுப்பு காவல் துறையினருடையது. அதனை காவல்துறை சரியாக செய்ய வேண்டும். கரோனா தொற்று பரவல் காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம், பொதுக்குழு அறிவிப்பு வெளியாகி விட்டதால் அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.

கால நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் பொதுக்குழு நடந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விக்கிற விலையில் தினகரன் ஒரு வண்டியிலும், சசிகலா ஒரு வண்டியிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது நியாயமா? அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது. 2017-ம் ஆண்டு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கிய பின்னர் அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தொண்டனுக்கும் தலைமைக்கும் ஒரே சட்டம் தான். கட்சி விதியை யார் மீறினாலும் தவறு. கட்சி விரோத நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் தவறு. கட்சி தன் கடமையை செய்யும். அமமுகவையும் சசிகலாவையும் பிரிக்க முடியாது. இருவரும் நகமும் சதையும் போன்றவர்கள்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in