முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் 1997 ஏப்ரல் 11 வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவகவுடா. 324 நாட்கள் மட்டுமே இவர் பிரதமராக பதவி வகித்தார். பதவிக்காலத்தில் உள்துறை அமைச்சர் பொறுப்பையும் தன் வசமே வைத்திருந்தார். அதற்கு முன்பு கர்நாடக மாநில முதல்வராகவும் பதவி வகித்த இவர் இந்திய அரசியலில் மிக முக்கியமான ஆளுமையாக உள்ளார். தற்போது தனது கட்சி, நிர்வாகம் ஆகியவற்றை தனது மகன் குமாரசாமியிடம் கொடுத்துவிட்டு அவர் ஓய்வில் இருந்து வருகிறார். இருந்தாலும் அகில இந்திய அளவில் முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி அரசியலில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறார். தேவையானபோது தன்னுடைய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
தற்போது 91 வயதாகும் தேவகவுடா பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அவர் முன்பு அறிவித்திருந்தார்.