
மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் அதிமுக மாநில மாநாடு, ‘கின்னஸ்’ சாதனை படைக்கும் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றபிறகு அதிமுகவின் முதல் மாநில மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கான அனுமதி வேண்டி, மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் சென்று மனு அளித்தனர்.
இதன் பின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதிமுக மாநில மாநாடு ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரை அருகே வலையங்குளத்தில் நடைபெறுகிறது. 50 ஆண்டுகால பொன்விழாவையொட்டி நடைபெறும் இந்த மாநாட்டிற்கு தகுந்த பாதுகாப்பும், அனுமதியும் வழங்கிட வேண்டும் என்று காவல்துறையிடம் மனு அளித்தோம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை எடப்பாடி.பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர், அதிமுகவைத் தோற்றுவித்த போது, நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் 15 நாட்களுக்கு முன்புதான் இரட்டை இலை சின்னம் கிடைத்தது. அப்போது தொண்டர்கள் சின்னத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல சுவற்றில் கரித்துண்டை வைத்து சின்னத்தை வரைந்து சென்றனர்.
அதேபோல் ஆகஸ்ட் 20-ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டிற்காகவும் தொண்டர்கள் சுவர் விளம்பரம் செய்து எழுச்சியாக பணியாற்றி வருகிறார்கள். இந்தியாவில் இதுவரை நடக்காத அளவிற்கு இந்த அரசியல் மாநாடு நடத்தப்படும். கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் மாநாடாக அதிமுக மாநாடு அமையும். மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 50 லட்சத்தில் இருந்து 60 லட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்" என்று தெரிவித்தனர்.