`கரோனா காலத்தில் கிடைத்த இடத்தில் தங்கிச் சாப்பிட்டுப் பணி செய்தார்கள்'- செவிலியர்களுக்காக குரல் கொடுக்கும் விஜயபாஸ்கர்

`கரோனா காலத்தில் கிடைத்த இடத்தில் தங்கிச் சாப்பிட்டுப் பணி செய்தார்கள்'- செவிலியர்களுக்காக குரல் கொடுக்கும் விஜயபாஸ்கர்

``கரோனா காலகட்டத்தில் கிடைத்த இடத்தில் தங்கி,  கிடைத்ததைச் சாப்பிட்டு, அர்ப்பணிப்போடு பணி செய்து நமக்கு  உதவியவர்கள் இந்த ஒப்பந்த செவிலியர்கள்'' என்று முன்னாள்  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நெகிழ்ச்சியுடன்  தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவத்துறையில் அதிகப்படியான செவிலியர்கள் தேவைப்பட்டதால் தற்காலிக செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அந்த  ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31- ம் தேதியுடன் நிறைவடைந்ததாக  தமிழக அரசு தெரிவித்தது. 

கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் அரசை  வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து, பணி நீட்டிப்பு பெறாத ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி வாய்ப்பு  வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். ஆனால்  தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கோரி  ஒப்பந்த செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும்  ஒப்பந்த செவிலியர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  "கரோனா நெருக்கடி காலகட்டத்தில் வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி எம்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் நாங்கள் பணி நியமனம் செய்தோம்.  பணிக்குச் சேரச் சொல்லி 8,500 பேருக்கு ஆணை அனுப்பினோம். ஆனால், அவர்களில் 2,400 பேர் மட்டும்தான் பணிக்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் அந்த இக்கட்டான நேரத்தில் இரவுபகலாக தூங்காமல் கர்ப்பிணிகள், பெண்கள் வெளிமாவட்டத்தில் தங்கி, கிடைத்த இடத்தில் தங்கிச் சாப்பிட்டுப் பணி செய்த இவர்களுக்குப் பணிநியமனம் செய்ய அரசு யோசிப்பது ஏன்?. கரோனா காலத்தில் நமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். அதுதான் நியாயம். ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இது குறித்து சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக கேள்வி எழுப்பும்" என்று பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in