27.9 கோடி ரூபாய் லஞ்சம்: ஆர்.வைத்திலிங்கம் மீது புகார் சொல்லும் அறப்போர் இயக்கம்!

ஆர் வைத்திலிங்கம்
ஆர் வைத்திலிங்கம்

முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர்.வைத்திலிங்கம் தற்போது ஒரத்தநாடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அவர் 2011-2016 -ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கட்டிட அனுமதி வழங்குவதற்காக 27.9 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் இதுகுறித்த ஒரு விரிவான புகாரை அளித்துள்ளார். இந்தப் புகாரில், அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் மற்றும் ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட், கேட்வே ஆபிஸ் பார்க்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

சென்னை பெருங்களத்தூரில் கட்டிடங்கள் கட்டுவதற்காக அனுமதிக்காக லஞ்சம் பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2013 டிசம்பர் 2-ல் 24 குடியிருப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளைக் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ-விடம் கட்டிட திட்ட ஒப்புதலுக்கு அந்தத் தனியார் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது. 2016 டிசம்பர் 24-ல் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அதற்காக 2015-16-ம் ஆண்டில் ஸ்ரீராம் குழுமங்களின் ஒரு பகுதியாக உள்ள பாரத் நிலக்கரி கெமிக்கல் லிமிடெட் 27.9 கோடி ரூபாய் தொகையை முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்தின் மகன் வி.பிரபுவுக்குச் சொந்தமான முத்தம்மாள் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு உத்தரவாதமில்லாத கடனாக அளித்துள்ளது.

கடந்த 2020 ஆண்டுவரை அது உத்தரவாதமற்ற கடன் பொறுப்பாக இருந்தது என்று குறிப்பிடும் அறப்போர் இயக்கம், உலோகம் மற்றும் ரசாயன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பாரத் நிலக்கரி நிறுவனம், முற்றிலும் மாறுபட்ட வணிகத்தில் ஒரு நிறுவனத்திற்கு உத்தரவாதம் இல்லாத கடனை எவ்வாறு வழங்கியது என்று கேள்வி எழுப்பியுள்ளது.

நிதி கிடைத்தவுடன், திருச்சியில் உள்ள பாப்பாக்குறிச்சி கிராமத்தில் 262/1 மற்றும் 262/2 சர்வே எண்களில் உள்ள நிலத்தை முத்தம்மாள் எஸ்டேட் 2015-16-ம் ஆண்டிலேயே 18 கோடி ரூபாய் முன்பணமாக வாங்கினர். மேலும், பாரத் நிலக்கரி நிறுவனம் தனது கடனை இதுவரை திரும்பப் பெறவில்லை. 2019-20-ம் ஆண்டில் கடன் வாராக்கடன் என திவாலானதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.

கட்டிட அனுமதிக்காக மட்டுமே அமைச்சரின் மகனின் நிறுவனத்திற்குத் தனியார் நிறுவனம் நிதியை மாற்றியதற்கு இதுவே ஆதாரம் என்று அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அனைத்து சி.எம்.டி.ஏ அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் ஶ்ரீராம் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், ஆர்.வைத்திலிங்கம் தரப்பினரும் ​​இந்தத் தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in