ஜெயலலிதா உயிர் போக நீங்கள் தான் காரணம்... ஓபிஎஸ் மீது ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு!

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

ஜெயலலிதா உயிரை ஓபிஎஸ் நினைத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம், அப்படி செய்யாததால் அவரது ஆன்மா தான் ஓபிஎஸ்சை வஞ்சிக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியுள்ளார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.  இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியை மீட்பேன் என்று சூளுரைத்து தமிழ்நாட்டில்  சுற்றி வந்தவர் அதைச் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அவருக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே வழங்கப்பட்டது.  ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக அவர் போட்டியிடுகிறார். அவருக்கு போட்டியாக அங்கு ஓ. பன்னீர்செல்வம் என்ற பெயரில் நான்கு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். 

இப்படி  கட்சியை மீட்க ஒன்றும் செய்ய இயலாமல் தவித்து வரும் அவரை ஜெயலலிதாவின் ஆன்மா வஞ்சிக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். உசிலம்பட்டியில்  நடந்த கூட்டத்தில் பேசிய அவர் ஓ.பன்னீர் செல்வத்தை தாக்கிப் பேசியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்

"ஓபிஎஸ் மூன்று முறை முதல்வராக இருந்தவர், இன்று கட்சியின் வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை, கட்சிப் பெயரை பயன்படுத்த முடியவில்லை. என்ன பாவம், என்ன துரோகம் செய்துள்ளார் என யோசித்து பார்த்தபோது அம்மா தான்(ஜெயலலிதா) காரணம் என்று தோன்றுகிறது.

அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அப்போது முதல்வராக இருந்த அவர், அதிகாரத்தை கையில் வைத்திருந்தார். அவர் நினைத்திருந்தால் அம்மாவை  வெளிநாட்டிற்குக் கூட  கொண்டு சென்று காப்பாற்றி இருக்கலாம். ஆனால் மவுன சாமியாராக இருந்துவிட்டார்.

அதனாலேயே பாவம் ஏற்பட்டு அம்மாவின் ஆன்மா வஞ்சிக்கிறதோ என  நினைக்கத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர்., அம்மா என முதல்வராக இருந்த யாருக்கும் இந்த நிலைமை இல்லை. இன்று வீதியில் நின்று கொண்டிருக்கிறார். ஒரே ஒரு சீட்டுக்காக சென்றிருக்கிறார். சின்னத்திற்காக அது வேண்டும், இது வேண்டும் என கேட்கிறார்.

அம்மா உயிர் பறிபோக நீங்கள் தான் காரணம். அம்மாவின் ஆன்மா உங்களை இந்த தேர்தல் முடிந்தபின் அரசியலை விட்டே போகும் நிலையை உருவாக்கும். ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்சை வஞ்சிக்கிறது.  துரோகம் செய்தவர்களுக்கு தக்க பாடத்தை தொண்டர்கள் காட்ட வேண்டும்"என்று உதயகுமார் ஆவேசமாக பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in