அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று நள்ளிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, கட்சியின் மிக பிரதான தலைவர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கமணியும், வேலுமணியும் தான் முக்கிய ஆலோசகர்களாக இருந்து வருகிறார்கள். கட்சியை நிர்வகிப்பதில் இவர்களது பங்கு பெரிது என கட்சி நிர்வாகிகள் கூறுவார்கள். தங்கமணி மின்துறை அமைச்சராக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பதவி வகித்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் முதல் சாமானிய பொதுமக்கள் வரை நாளொன்றுக்கு பல ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நேற்று முதல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அத்துடன் உடல் சோர்வும் இருந்ததால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. அதையடுத்து நேற்று நள்ளிரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் அனுமதிக்கப்பட்ட அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.