`லேசான காய்ச்சல்தான், கரோனா பாதிப்பு இல்லை'- வைத்திலிங்கம் விளக்கம்

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் தனக்கு கரோனா பாதிப்பு இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 23-ம் தேதியன்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில கலந்துகொண்டவர்கள் பலருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர்கள் இருவருக்கும், எடப்பாடியின் மனைவிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஓபிஎஸ் ஆதரவாளரும், அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் பரவின.

இதையடுத்து, தனக்கு கரோனா பாதிப்பு இல்லை என வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். பொதுக்குழு முடிந்தபின் ஒரு நாள் கழித்து தஞ்சாவூருக்கு வந்திருந்த வைத்திலிங்கம் அங்கும் தன் ஆதரவாளர்களுடன் இரண்டு நாட்கள் தங்கி ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில் ஓபிஎஸ் நேற்று முன்தினம் சென்னைக்கு திரும்பியதால் வைத்திலிங்கமும் மீண்டும் சென்னை சென்றார்.

சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருக்கும் நிலையில்தான் வைத்திலிங்கத்திற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதையடுத்து வைத்திலிங்கம் தரப்பிலிருந்து கரோனா இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. காய்ச்சலுக்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வைத்திலிங்கம் ஓய்வில் உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in