`அதிமுகவில் அவருக்கு இடமில்லை; பாஜகவுக்கு போகட்டும்'- சசிகலாவுக்கு வழிகாட்டும் நத்தம் விஸ்வநாதன்

`அதிமுகவில் அவருக்கு இடமில்லை; பாஜகவுக்கு போகட்டும்'- சசிகலாவுக்கு வழிகாட்டும் நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

விரைவில் அதிமுக தனது தலைமையின் கீழ் வரும் என்று சசிகலா ஊர் ஊராக போய் உற்சாகமாக சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், ஒருகாலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சசிகலாவை ஒருபோதும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார். பாஜக அழைத்தால் அங்கு வேண்டுமானால் அவர் சேர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் சசிகலாவுக்கு வழிகாட்டியிருக்கிறார்.

புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட நத்தம் விஸ்வநாதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சசிகலாவை ஒரு போதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளமாட்டோம். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு நபர் குறித்து பேசவேண்டிய அவசியம் இல்லை.

அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவர் சரியான முறையில் கட்சியை வழி நடத்தி வருகின்றனர். பாஜகவினர் அழைத்தால் அங்கு வேண்டுமானால் சசிகலா செல்லட்டும். இங்கு அவருக்கு இடமில்லை. அதிமுகவைப் பொறுத்தவரையில் எதுவாகினும் பொதுக்குழு எடுக்கும் தீர்மானம் மட்டுமே அதிகாரப்பூர்வமானது.

திமுகவும், மின்தடை பிரச்சனையும் பின்னிப் பிணைந்தவை. அது பிரிக்க முடியாதது. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை பிரச்சினை வந்துவிடும் என்பது எல்லோரும் அறிந்ததே. மின்தடை பிரச்சினைக்கு தற்போதைய அமைச்சரின் நிர்வாக திறமை இன்மையே காரணம். அவருக்கு இத்துறையை பற்றி அனுபவம் போதாது. மின்சாரத் துறையை தமிழக முதல்வரே கையில் எடுத்து கவனித்தால் மட்டுமே மின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று அதிமுகதான். அதிமுக மட்டுமே தமிழகத்தில் எதிர்கட்சியாக இருக்க முடியும். பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தோர், அரசியல் காரணங்களுக்காக சில விஷயங்களை கூறுவார்கள். அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in