யார் பிக் பாக்கெட்? - ஓபிஎஸ்சை விளாசும் ஜெயக்குமார்

டி. ஜெயக்குமார்
டி. ஜெயக்குமார்யார் பிக் பாக்கெட்? - ஓபிஎஸ்சை விளாசும் ஜெயக்குமார்

ஓபிஎஸ்தான் பிக் பாக்கெட் போல செயல்படுகிறார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார் 

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் ஈபிஎஸ் பிக்பாக்கெட் போல செயல்படுகிறார் என்று விமர்சனம் செய்திருந்தார். அது ஈபிஎஸ் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் தான் பிக் பாக்கெட் என்று கடுமையாக பதிலளித்துள்ளார். 

தொடர்ந்துப் பேசிய ஜெயக்குமார், "கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ்சை மீண்டும் கட்சியில்  சேர்த்தோம்.  அம்மாவின் மரணத்தில் அந்த குடும்பத்தின் மீது சந்தேகம் உள்ளது என்று சொன்னார். அதனால் எடப்பாடி ஆட்சியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  என்றைக்காவது அதில் ஆஜர் ஆனாரா? கடைசியில் போனார். அப்போது  அம்மா  மரணத்தில் சசிகலா மீது எந்த சந்தேகமும் இல்லை என்று சொன்னார்.  அது மிகப்பெரிய துரோகம்.

அடுத்து  பாராளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல். அது  மினி  சட்டமன்றத் தேர்தல்.  ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும். அதில் ஒன்பது பேர் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தோம். ஆனால் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் வெற்றி பெற்றார். அதில் உள்ள  பெரியகுளம் ஆண்டிப்பட்டி  இரண்டு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக தோல்வி அடைந்தது. 

அதில் அவர்களால் ஜெயிக்க முடிந்ததா?. தேனி பாராளுமன்ற தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வெற்றி பெற்றவர்கள் அதிலிருந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளை தோற்கடித்தார்கள். அது ஒரு துரோகம். அதையும் மன்னித்து ஏற்றுக் கொண்டோம். அதன் பிறகு பொதுத் தேர்தல் வந்தது. இவர்களுடைய மாவட்டத்தில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார்,  மற்ற யாரும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. எடப்பாடியார் வந்து விடக்கூடாது என்பது அவருக்கு எண்ணம். 

அதிமுக எடப்பாடியார் தலைமையில் சிறப்பாக வழி நடத்தப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ், கட்சி எப்படி போனாலும் கவலை இல்லை என்று நடந்து கொள்கிறார். கழகத்திற்கு விரோதமான செயல்களை செய்து வருகிறார். அவருடைய பேட்டி விரக்தியின் உச்சமாக இருக்கிறது. நிதானம் இழந்து கட்சிக்கு எதிராக பேசி வருகிறார். பிக் பாக்கெட் என்று சொல்லலாமா? அப்படி சொல்லும் அவர்தான் உண்மையில் பிக் பாக்கெட். 

ஆமை புகுந்த வீடும், அமினா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள். அப்படிப்பட்டவர்தான் பண்ருட்டி ராமச்சந்திரன். எந்தவித முகாந்திரமும் இல்லாமல் சகுனி போல அவர் பேசியிருக்கிறார். கட்சி எடப்பாடி தலைமையில் எழுச்சியுடன் செயல்பட்டு வருகிறது.  அந்த எழுச்சியை இவர்களால்  பொறுத்துக் கொள்ள முடியவில்லை . அதனால் இப்படி பேசுகிறார்கள்.

கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  ஒரு கோடியே 44 லட்சம் தொண்டர்கள், மற்றும் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அத்தனை பேருமே எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.  பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது. அதிமுக பெயரை உபயோகிக்கவே அவர்களுக்கு முகாந்திரம் இல்லை.

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பம் பெறலாம். ஓபிஎஸ் போன்றவர்களுக்கு அந்த தகுதி இல்லை. உச்ச நீதிமன்றத்தில் எந்த தடையும் கிடையாது. பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இதுதான் உரிய நேரம்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in