ஓபிஎஸ் எப்படி கட்சிக்கரை போட்ட வேட்டியைக் கட்டலாம்?: கேட்கிறார் டி.ஜெயக்குமார்

ஓபிஎஸ் எப்படி கட்சிக்கரை போட்ட வேட்டியைக் கட்டலாம்?: கேட்கிறார் டி.ஜெயக்குமார்

ஓபிஎஸ் வேண்டுமானால் அவர் பெயரில் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கலாம். நாங்கள் எதற்காக புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டத்தை  ஒரு நிறுவனத்தின் கூட்டமாகத்தான் பார்க்க முடியும். அதனைக் கட்சியின் கூட்டமாகப் பார்க்க முடியாது. பண்ருட்டியார் பண்பாகப் பேசுபவர். எப்படி ஒருமையில் பேசினார் என்று தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் விரக்தி மற்றும்  கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவரும் ஒருமையில் பேசியதை  ஒட்டுமொத்தமாக விரக்தியின் உச்சமாகத்தான்  ஒவ்வொரு தொண்டர்களும்  பார்க்கிறார்கள்.

அவருடைய இயல்பு தெரிந்துவிட்டது. உண்மையான முகம் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிந்துவிட்டது. தன்னுடைய அருமை மகன் பற்றிப் பேசியுள்ளார். அவருடைய மகனுக்கு வரவேண்டிய அமைச்சர் பதவியைத் தடுத்துவிட்டோமாம். யாரும் தடுக்கவில்லை. அதனைத் தடுக்கும் வேலை அதிமுகவுக்கு கிடையாது. 

திமுகவின் பி டீமாக இன்றைக்குத் தேவையில்லாத கருத்துக்களை கூறி கட்சி தொண்டர்களைக் குழப்புகின்றார். இருந்தாலும் இங்குக் குழப்பம் செய்ய முடியாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்த கருத்தோடு எடப்பாடியார் தலைமையில் இருக்கின்றோம். 

நாங்கள்தான் கட்சி. நாங்கள் ஏன்  புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டும். அவர் வேண்டுமானால்  ஓபிஎஸ் முன்னேற்றக் கழகம் என்று ஒன்றை  ஆரம்பித்து பலத்தை காண்பிக்கலாம். நாங்கள் ஆரம்பிக்கவேண்டிய அவசியம்  இல்லை. இரட்டை இலை எங்களிடம் உள்ளது. கட்சி, தலைமைக் கழகம் எங்களிடம் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு அது  அவசியம் இல்லை. 

அவர் பலம் என்ன என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அம்மா காலத்தில் நால்வர் அணி,  தலைவர் காலத்தில் போட்டி அதிமுக இதெல்லாம்  என்ன ஆனதோ அதேபோலத்தான் இதுவும் காணாமல் போகும்.

ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுதான் நீக்கியது. சர்வ அதிகாரம் படைத்த பொதுக்குழு அவரையும் அவர் சார்ந்தவர்களையும்  நீக்கும்போது அவர் எப்படி எங்கள் கட்சிக்கு சம்பந்தப்பட்டவராக இருக்க முடியும். உயர்நீதிமன்ற இருவர் கொண்ட அமர்வு ஏற்கெனவே தீர்ப்பு அளித்துள்ளது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி கட்சியின் கரை வேட்டியைக் கட்டலாம். கட்சிக் கொடி, லெட்டர்பேடு,  கட்சிப் பெயரை பயன்படுத்தலாம் ? அவர் எங்கள் கட்சியைப் பயன்படுத்தக்கூடாத அளவுக்கு அனைத்து விதமான சட்ட நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.

பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று ஓபிஎஸ் சொல்கிறார். கவுன்சிலராக நின்றால் கூட அவரால்   வெற்றி பெற முடியாது. 2024 பாராளுமன்ற தேர்தலின்போது எங்கள் தலைமையிலான கூட்டணிதான் அமையும். எங்கள் தலைமையை ஏற்றுத்தான் அனைவரும் வருவார்கள். அப்படி வரும்போது நாங்கள் அளிக்கும் சீட்தான். எங்களை யாரும் வற்புறுத்த முடியாது. எனவே, பொய்யான செய்தியைப் பரப்பிக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளில்  பத்திரிகைகள் ஈடுபடவேண்டாம். 

ஏதோ ஒரு கொல்லைப்புற வழியில் வந்துவிட்டு எறும்பு எல்லாம் சேர்ந்து புற்று எடுக்க அதில் கருநாகம் புகுந்ததுபோல புகுந்து இன்றைக்குக் கலகம் செய்ய நினைத்தார்.  கழகம் என்பது மிகப்பெரிய இயக்கம். அதனை உடைக்க முடியாது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in