`கூசாமல் முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார்'- விமர்சிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

காசிமேடு துறைமுகத்தில் ஜெயக்குமார்
காசிமேடு துறைமுகத்தில் ஜெயக்குமார்

``மீனவ சமுதாயம் முழுக்க, முழுக்க வஞ்சிக்கப்படுகின்ற நிலைதான் இந்த விடியா அரசில் இருக்கிறது'' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மழை பாதிப்புகளை  இன்று ஆய்வு செய்த பின்னர் முன்னாள் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புயல் பாதிப்பு என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் முக்கியம். அதன் பிறகு புயலின் தாக்கத்தால் ஏற்படுகின்ற பாதிப்புகளை கண்டறிந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் குழு போடப்பட்டு, அந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையிலே நிவாரணங்களை வழங்க வேண்டும்.

அப்படி வாரி வாரி வழங்கிய ஆட்சி அம்மாவின் ஆட்சி. அந்த அடிப்படையில்தான் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில்  கஜா புயல், ஒக்கி புயல், வர்தா புயல் ஆகியவை  வந்த சூழ்நிலையிலும் நேரடியாகச் சென்று பார்த்துக் கணக்கெடுத்து மக்கள், மீனவ மக்களும் சரி, விவசாயிகளும் சரி, மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது  என்று  அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய திட்டங்களை எல்லாம் அறிவித்து, பொருளாதாரம் ஏற்றம் பெறுவதற்கு நிவாரணங்களும் வழங்கப்பட்டது. 

ஆனால் இந்த விடியா திமுக அரசைப் பொறுத்தவரையில் ஆட்சிக்கு வந்து 18 மாதத்திற்கு மேலாகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளிகள், மீனவர்கள் என எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள். குறிப்பாக மீனவ சமுதாயம் முழுக்க, முழுக்க வஞ்சிக்கப்படுகின்ற நிலைதான் இந்த விடியா அரசில் இருக்கிறது. 

தேர்தல் காலத்தில் மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள்  நிறைவேற்றவில்லை.  எங்கள் ஆட்சிக் காலத்தில் மாதத்திற்கு  விசைப்படகுகளுக்கு 1,800 லிட்டர் டீசல் அளித்தோம். அதேபோல  அனைத்து படகுகளுக்கும் மானியம் அளித்து, டீசல் விலை உயர்ந்தாலும்கூட அவர்களுக்குச் சுமை குறைகின்ற நிலையை ஏற்படுத்தினோம்.  இப்போது  2,500 லிட்டர் தரவேண்டும் என்று மீனவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விடியா அரசு அதனைச் செய்யவில்லை. 

ஒரு பக்கம் இலங்கை கடற்படை தாக்குதல். இதனைப் பொறுத்தவரையில் இந்த அரசு கண் மூடி,  வாய் மூடி மௌனமாக உள்ளது.  மேன்டூஸ் புயல் கடந்த 5-ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது. இந்த நிலையில் இந்த விடியா அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

உடனடியாக கூட்டத்தை போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, அதாவது பாதுகாப்பாக மக்களைத் தங்கவைப்பது, கடல் அரிப்பைத் தடுப்பது போன்ற நடவடிக்கையைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திருக்க வேண்டும்.  ஆனால்  அவர் தென்காசிக்கு குளு, குளு சுற்றுலா போகிறார். மீனவர்கள் 10 நாட்களாகத் தொழிலுக்குப் போகவில்லை. பசியும், பட்டினியுமாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு ரூபாய் இந்த அரசு அளிக்கவில்லை. 

இந்த பகுதியில்  200 படகுகள் பாதிப்படைந்துள்ளன.  வல்லங்கள், கட்டு மரங்கள், நாட்டுப் படகுகள், இன்ஜின் பொருத்திய படகுகள் போன்ற அனைத்து படகுகளுக்கும் பகுதி பாதிப்பு, முழு பாதிப்பு என நிவாரணம் வழங்கவேண்டும். பெரிய படகுகளுக்கு 20 லட்சம், சிறிய படகுகளுக்கு 10 லட்சம், அதற்கும் சிறியதாக இருந்தால் 5 லட்சம் தரவேண்டும் என்பதுதான் மீனவர்களின் எதிர்பார்ப்பு. 10 நாட்கள் தொழிலுக்குப் போகாமலிருந்துள்ளார்கள்.  கூட்டுறவுச் சங்க மகளிருக்கும், ஆண்களுக்கும் 25 ஆயிரம் வழங்கவேண்டும்  குறைந்தபட்சம் 10 ஆயிரமாவது வழங்கவேண்டும்.

சூழ்நிலை இப்படி இருக்கும்போது கூசாமல்  ஸ்டாலின் பொய் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்கிறார். எப்படிதான்  வாய்க்கூசாமல் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. சிரிக்காமல் ஜோக் சொல்கிறார். நாட்டு நடப்பே தெரியாத ஒரு முதலமைச்சர்தான் உள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சைக்கேட்டுப் பேசிவருகிறார். 

கள நிலவரம் என்ன என்று யோசிக்கவேண்டாமா? அடிப்படையில் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை உணர்ந்து சொல்லவேண்டாமா?  நாட்டு நடப்பை உணர்ந்தவர்கள் மட்டும்தான் நாட்டின் முதலமைச்சராக இருக்க முடியும். இரண்டும் இல்லாத ஒரு பொம்மை முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்.

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்காக  1 கோடியே 40 லட்சம் ரூபாயில் பாதை  அமைந்திருந்தார்கள். அது ஒரு வாரம்கூட தாங்காமல் உடைந்துள்ளது. கடலில் எப்போது வேண்டுமானாலும் சீற்றம் வரும். அதனால்  பைபர் கொண்டு அமைத்திருக்கவேண்டும்.  மரபலகையில் போடலாமா. மரமண்டை அரசுக்கு ஏதாவது புத்தி வேண்டாமா. இது அவர்களுக்குத் தெரியும். இதனை 1.50 கோடி செலவு செய்தால் அது கடல் அரிப்பில் போய்விடும். திரும்பவும் 1.50 கோடியில் போடலாம் அல்லவா. அப்போதுதான் அவர்களுக்கு வருவாய் வரும்"  என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in