`தனது வீட்டில் திருடினாலும் திருடன் திருடன் தான்'- ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்த சி.வி.சண்முகம்

`தனது வீட்டில் திருடினாலும் திருடன் திருடன் தான்'- ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்த  சி.வி.சண்முகம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்து பேசினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது சம்பந்தமாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த 11.7.2022 அன்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது இங்கே தலைமைக் கழகத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்போடு தனது வாகனத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து கொண்டு அலுவலகத்தின் சாலையில் இருந்த அனைத்து வாகனங்களையும் அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த கழக நிர்வாகிகள், தொண்டர்களையும் அடித்தனர். மேலும், தலைமை கழகத்தில் உள்ளே இருந்த பிரதான வாயிலை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தினர் ஓ.பன்னீர்செல்வத்தின் குண்டர்கள். இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பின. பொதுமக்கள் அனைவரும் அதைப் பார்த்தார்கள். அந்த சம்பவம் தொடர்பாக அன்றைக்கு சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் புகார் அளித்தார்.

ஆனால் சென்னை மாநகர காவல்துறை, நாங்கள் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களாகவே ஒரு புகாரை துறை வாயிலாக பெற்று பதிவு செய்து, அடிபட்ட அதிமுக நிர்வாகிகளின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், காயமடைந்தவர்களை 14 பேரை கைது செய்தது காவல்துறை. பிறகு முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை ஆர்டிஓ சீல் வைத்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிலே நீதிமன்றம் 20.7.2022 அன்று தீர்ப்பு வழங்கி அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 21.7.2022 அலுவலகம் திறக்கப்பட்டு சாவி அலுவலகத்தின் மேலாளர் மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று நானும் இருந்தேன். இதன் பின்னர் அலுவலகத்தை சென்று பார்த்தபோதுதான் அனைத்தும் உடைக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டிருந்தது.

ஜெயலலிதாவின் அறை முழுமையாக அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 23.7.2002-ம் ஆண்டு நானே ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் அந்த புகாரை பதிவு செய்யவில்லை. இதையடுத்து, 27.7.2022 அன்று நான் கொடுத்த புகார் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி தமிழக உள்துறை செயலாளர், காவல்துறை தலைவர் என மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்திலே வழக்கு தொடரப்பட்டது. அதில், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க காரணம் என்று திமுக அரசுதான். ஆகவே தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பொருட்களை உடைத்து ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உட்பட குண்டர்கள், ரவுடிகள் மீதும் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. சம்பவம் நடந்து இன்றோடு 53 நாட்கள் ஆகிவிட்டது. நான் புகார் கொடுத்து 41 நாட்கள் ஆகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவர் புகார் அளித்தால் அந்த புகார் உடனே பதிவு செய்யப்பட வேண்டும். அந்த நகலை சம்பந்தப்பட்டவர்களிடம் தரப்பட வேண்டும். ஆனால், இந்த வழக்கிலே நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தமிழக அரசு சொல்கிறது. ஆனால், இன்று வரை விசாரணை தொடங்கப்படவில்லை.

சம்பவம் நடந்த தலைமை அலுவலகத்தை காவல்துறையினர் பார்க்கவில்லை. 53 நாட்களாக அதிமுக அலுவலகம் அப்படியே இருக்கிறது. இந்தக் கட்டிடம் ஜானகி அம்மாள் கொடுத்த கட்டிடம். அந்த கட்டிடத்தின் ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் திருடி கொண்டு சென்று இருக்கிறார் . தற்போது அவர் சொல்கிறார், என் வீட்டிலே நான் திருடுவேனா. உன் வீடாக இருந்தாலும் திருடினால் குற்றம் குற்றமே. திருடன் திருடன்தான். அது உங்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல. இது அதிமுக சொத்து. வாரத்துக்கு வைத்துக் கொண்டாலும் அந்த சொத்தின் உரிமையாளர்கள் நீங்கள் கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலே நீங்கள் அதற்கு பாதுகாவலர் தான். அங்கு இருக்கிற ஆவணங்களை நீங்கள் சரி பார்க்கலாம். அங்கிருந்து எடுத்து செல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இப்படி தெள்ளத்தெளிவாக ஒரு குற்றத்தை நடத்தியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இந்த குற்றவாளி மீது இந்த அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று விமர்சனம் செய்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in