சவால் விட்ட சண்முகத்தை கைது செய்த போலீஸ்!

சவால் விட்ட சண்முகத்தை கைது செய்த போலீஸ்!
சி.வி.சண்முகம்

சொத்து வரி உயர்வை கண்டித்து கடந்த 5 ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அன்றைய தினம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விழுப்புரம் வருகை தந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் அன்றைக்குப் பதில் இன்று அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனம் திட்டம், அம்மா மினி கிளினிக் ஆகிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், திமுக ஆட்சியில் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தியும் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அர்சுனன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாததால் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதையடுத்து கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை கைது செய்யமுற்பட்டனர்.

அப்போது சிவி சண்முகத்தை கைது செய்யவிடாமல் அதிமுக நிர்வாகிகள் தடுத்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. ஆனாலும் தள்ளுமுள்ளுக்கிடையே சி.வி.சண்முகம் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் பேருந்தில் ஏற்றப்பட்ட போதும் பேருந்தை வழிமறித்து அதிமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறைக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து தொண்டர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து அனைவரையும் வாகனங்களுக்கு வழிவிட்டு கலைந்து செல்லுமாறு கேட்டுகொண்டார். இதனை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்யப்பட்டபோது முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள் என்று சவால் விட்டார் சி.வி.சண்முகம். அன்றைய தினமே நள்ளிரவில் அவர் கைது செய்யப்படுவார் என்று பரபரப்பு கிளம்பி அதிமுகவினர் ஏராளமானவர்கள் சண்முகத்தின் வீட்டுக்கு முன் கூடினார்கள். ஆனால், அப்போதெல்லாம் செய்யப்படாத சி.வி.சண்முகம், எதிர்பாராத நேரத்தில் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.