குண்டு வெடிப்பை விட நயன்தாராவுக்கு குழந்தை முறையாக பிறந்ததா என்பதில் தான் அரசுக்குக் கவலை!- போட்டுத்தாக்கும் சி.வி.சண்முகம்

குண்டு வெடிப்பை விட நயன்தாராவுக்கு குழந்தை முறையாக பிறந்ததா என்பதில் தான் அரசுக்குக் கவலை!-  போட்டுத்தாக்கும் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் குண்டு வெடித்ததா இல்லையா என்பதைப்  பற்றிய  கவலை எல்லாம் தமிழக அரசுக்கு இல்லை. நடிகை நயன்தாராவுக்கு குழந்தை பிறந்ததா  என்பதுதான் இந்த அரசுக்கு இருக்கும் பெரும் கவலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.  

விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி  தலைமையில், என்எல்சி பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 

இதில் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளர்கள் அருண் மொழிதேவன், பாண்டியன், திருச்சி மாவட்ட செயலாளர் குமார், அர்ஜுனன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பிறகு  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில் " என்எல்சி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நிலத்தை வழங்கிய மக்களை வஞ்சித்து வருகிறது.  என்எல்சி சுரங்கங்களுக்காக நிலத்தை வழங்கிய மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை தரவில்லை. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு வேலை வாய்ப்பும் வழங்கவில்லை. 

தமிழகத்தின் வளங்களைப் பயன்படுத்தும் என்எல்சி நிர்வாகம் அங்கே நிலம் வழங்கிய மக்களுக்கான உரிமையைப் பறித்துள்ளது.  என்எல்சி நிர்வாகத்தில் தற்போது கூட 300 பொறியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒருவருக்குக் கூட தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வேலை வழங்கவில்லை.

இதுகுறித்து தமிழக திமுக அரசும், எம்பி-க்களும் நாடாளுமன்றத்தில் பேசி உரிமையை பெற்றுத்தரவில்லை.  என்எல்சி நிறுவனத்துக்கு நிலத்தை வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும்.
நிலம் வழங்கியவருக்கு நீர்நிலை இடங்களை வழங்கி, அதனைப் பயன்படுத்த முடியாமல் மோசடி வேலை செய்துள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு குழு அமைத்து தீர்வு காணப்படும் என தெரிவித்தது. ஆனால், அதை செயல்படுத்த வில்லை. தமிழக முதல்வர் உடனடியாக அதற்கான குழுவை அமைத்து தீர்வு காண வேண்டும். என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எங்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக போராடும்" என்றார்.

மாநில அரசு அதிகாரிகள் மத்திய அரசுக்குப் பயப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,  "தலைமைச் செயலாளர் பயப்படுவதாக கூறுகிறாரா? அதனால்தான் முதல்வர் பம்மிக்கொண்டு உள்ளாரா? நடிகை நயன்தாராவுக்கு குழந்தை முறையாக பிறந்ததா என்பதே அரசுக்கு கவலை. குண்டு வெடித்ததா இல்லையா என்பது பற்றி அக்கறை இல்லை" என்றார் சி.வி. சண்முகம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in