அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா

ஓபிஎஸ், ஈபிஎஸ் கோபத்துக்கு ஆளான காரணம்?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா

அதிமுக சிறுபான்மைப் பிரிவின் மாநிலச் செயலாளராக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர், முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா. பாஜகவுடன் கூட்டணி என்பதைத் தாண்டி, அதிமுகவையே பாஜக நடத்துவது போன்ற புகார்கள் வரத் தொடங்கியபோது, சிறுபான்மை மக்களின் உணர்வுகளை கட்சித் தலைமையிடம் பிரதிபலித்தார் அன்வர் ராஜா. விளைவாக, நீண்டகாலமாக கட்சியில் பொறுப்பு வகிக்கும் அவருக்கு சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமின்றி, மக்களவைத் தேர்தலிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவந்தது.

இடையில், எடப்பாடி பழனிசாமியை அன்வர் ராஜா விமர்சிக்கிற ஆடியோ ஒன்று வெளியானது. அதில் அன்வர் ராஜா, ஈபிஎஸ்ஸை ஒருமையில் விமர்சனம் செய்திருப்பதாக சமீபத்தில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது. “அதிமுக வலுவிழந்துபோய்விட்டது. தலைமைகள் சரியில்லை. கட்சியை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும்” என்று அன்வர் ராஜா சொன்னதால்தான், இந்த மோதல் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது.

“இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அன்வர் ராஜா பங்கேற்பதைத் தவிர்க்கவே, இரவோடு இரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிமுகவினர் கருதுகிறார்கள்.”

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அன்வர் ராஜா, “சின்னம்மாவை கட்சியில் சேர்க்க வேண்டும்” என்ற கருத்தைத் திரும்பத் திரும்பச் சொன்னார். கூடவே, “என்னைத் தவிர அதிமுக தலைவர்கள் எல்லோருமே சசிகலா காலில் விழுந்தவர்கள்தான்” என்றும், “எடப்பாடி பழனிசாமி டேபிளுக்கு அடியில் தவழ்ந்து சென்றதைத்தான் நாடே பார்த்ததே” என்றும் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளைத் தெரிவித்து, கழகத்திற்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அ. அன்வர் ராஜா, (கழகச் சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், முன்னாள் அமைச்சர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதில் அன்வர்ராஜா பங்கேற்பதைத் தவிர்க்கவே, இரவோடு இரவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அதிமுகவினர் கருதுகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in