காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா?... பாஜக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா என்று கர்நாடகா பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பியுள்ளதற்கு தமிழ்நாட்டு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் பிறக்கும் காவிரி,  பிறந்த வீடான கர்நாடகத்தை விட்டு புகுந்த வீடான தமிழகத்தில் புகுந்ததும் பொலிவு பெறுகிறாள். தானும் வளம் பெற்று,  தமிழ்நாட்டு மண்ணையும், மக்களையும் வளப்படுத்துகிறாள். ஆனால் கர்நாடக மாநிலம்,  அப்போது இருந்த மைசூரு மாகாணத்திலும் சரி, அதற்கு முன்பு மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும் சரி காவிரிக்கு இடையூறு செய்து கொண்டேதான் இருக்கின்றனர். 

அங்குள்ளவர்களின் தடைகளை இங்கிருந்து படை எடுத்துச் சென்று உடைத்து காவிரியை மீட்டு வந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதன் பிறகு சட்ட நடைமுறைகள் வந்த பிறகு சட்டப் போராட்டங்களை நடத்தி தொடர்ந்து காவிரியில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை தமிழக மக்கள் பெற்று வருகிறன்றனர்.

இதையெல்லாம் தாண்டி  ஒருவழியாக உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம்,  காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் மூலமாக தமிழகத்திற்கான நீர் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

காவிரி
காவிரி

ஆனால், அந்த பங்கீட்டையும் ஒழுங்காக தராமல் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக அரசு  பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. கர்நாடகத்தில் அதிக மழை பொழிந்து வெள்ளம் ஏற்படும்போதெல்லாம் அதனை காவிரியில் திறந்து விடும் அந்த மாநில அரசு,  அங்கு இயல்பான மழை அளவு இருக்கும்போது தங்களுக்கு வேண்டிய அளவு நீரை பல்வேறு கட்டங்களாக தேக்கி வைத்துவிட்டு,  கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்று தமிழக மக்களுக்கு கை விரித்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் தமிழகத்திற்கு கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய நீரை கர்நாடக அரசு, திறந்து விடாமல் கடுமையாக நடந்து வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது பெயரளவிற்கு சுமார் 5000 கனஅடி அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை

இந்த நிலையில் இதற்கு கர்நாடக மாநில விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பசவராஜ் பொம்மை, காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார். "காவிரி கர்நாடகத்தில் பிறக்கிறது, அதன் குறுக்கே அணைகள் கட்டி கர்நாடகா அரசு தண்ணீரை சேமித்து வைக்கிறது. இதற்கான அனைத்து செலவுகளையும் கர்நாடக அரசு செய்யும் நிலையில் தண்ணீரை மட்டும் தமிழக அரசு பெறுகிறது. காவிரி என்ன தமிழ்நாட்டின் சொத்தா?" என்று அவர் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரியில் கர்நாடகத்துக்கு  இருக்கும் உரிமையை விட தமிழகத்திற்கே  அதிக உரிமை உள்ளது என்பது அனைத்து நிலைகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறும் தமிழக விவசாயிகள்,  காவிரி தமிழ்நாட்டின் சொத்துதான் என்று பசவராஜ் பொம்மைக்கு தீர்க்கமாக பதில் அளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in