முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறைவு... நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி!

எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தும் ஓபிஎஸ்
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்தும் ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலின் காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  அத்துடன் அதிமுக பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் மூலமாக அதிமுக  அவர் வசம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார். அதனால் ஓபிஎஸ் வேறு வழியின்றி தனி அணியாக செயல்பட்டு வருகிறார். 

இந்நிலையில், விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளத்தில் நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்கான பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுவார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு வரவில்லை. திடீரென அவருக்கு தலைச்சுற்றல்  ஏற்பட்ட நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். அவரை  தனியார் மருத்துவமனை மருத்துவர் வந்து பரிசோதித்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் ஓய்வெடுத்து வருகிறார். தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in