அகவை நூறைத் தொட்டார் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்: ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

அகவை நூறைத் தொட்டார் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்: ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

இந்தியாவில் மூத்த மார்க்சிஸ்ட் முன்னோடிகளில் ஒருவரும், கேரள முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன் இன்று 100 வயதைத் தொடுகிறார். கேரளம் முழுவதிலும் மார்க்சிஸ்ட் கட்சியினர் அவர் குறித்த நெகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

தன் 97-ம் வயதுவரையிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் நடவடிக்கைகளிலும் தீவிரமாகச் செயல்பட்ட அச்சுதானந்தன், கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் வயோதிகத்தின் காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கினார். 1994-ம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கருணாகரன் மீதான பாமாயில் இறக்குமதி வழக்கு, முன்னாள் மின்துறை அமைச்சர் பாலகிருஷ்ணன் பிள்ளை மீதான ஊழல் வழக்குகள், 1990களில் ஐஸ்க்ரீம் பார்லர் பாலியல் வழக்கு, முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணிக்கு எதிரான பார் லஞ்ச வழக்கு ஆகிய விசயங்களில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தீவிர போராட்டங்களை முன்னெடுத்தவர் அச்சுதானந்தன்.

தன் மனதுக்குபட்ட நியாயத்தை செய்வதிலும் வி.எஸ்.அச்சுதானந்தன் தனித்தன்மை மிக்கவர். மூத்த இடதுசாரி தலைவராக இருந்த கெளரியம்மாவே அதனால்தான், ‘ஒருவேளை அச்சுதானந்தன் இடத்தில் நான் இருந்திருந்தால் கட்சி என்னை நூறுமுறையேனும் வெளியேற்றி இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். ஆளும்கட்சியாகவும், ஏன் முதல்வராக இருக்கும்போதும் எதிர்க்கட்சி போன்று ஜனநாயகவாதியாக செயல்பட்டவர் அச்சுதானந்தன். 2004-ம் ஆண்டு மலப்புரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் மாநில மாநாட்டில் வி.எஸ்.அச்சுதானந்தன் பரிந்துரைத்தவர்களை வீழ்த்தி கவனிக்க வைத்தார் பினராயி விஜயன்!

கடந்த 2006-ம் ஆண்டு கேரள முதல்வர் ஆனார் வி.எஸ்.அச்சுதானந்தன். அப்போது, கட்சியின் மாநில செயலாளராக பினராயி விஜயன் நியமிக்கப்பட்டார். ஆனால் அப்போதே இருவருக்கும் வார்த்தைப்போர் வெடிக்க, தலைமையே தலையிடும் சூழல் வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு வி.எஸ்.அச்சுதானந்தன் தன் வயதைக் காரணம் காட்டி மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் 2016 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் அச்சுதானந்தனின் பிரச்சாரத்தையே தலைமை நம்பியது. அவரை சுற்றுப்பயணத்திற்கும் அனுப்பியது. அதன் பலனாகவே 2016-ல் பினராயி விஜயன் அரசு அமைந்தது. அது இரண்டாவது முறையும் தொடர்கிறது. ஆட்சிக்கு வந்த கையோடு வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு கேரள நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது. ஆனால் அதையும் வயோதிகத்தைக் காரணம்காட்டி 2019-ம் ஆண்டில் விலகிக்கொண்டார் அச்சுதானந்தன்.

இன்று திருவனந்தபுரத்தில் உள்ள தன் மகன் வீட்டில் நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடும் அச்சுதானந்தன், “இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறேன். ரசாயனக் கலப்பற்ற இயற்கை விளைபொருள்களையே உணவாக எடுத்துக்கொள்கிறேன். இதுதான் என் நூறு வயதை நான் தொட்ட ரகசியம்!” என்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in