
அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்காக பிரிந்து கிடைக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி, சசிகலா தலைமையில் ஒரு அணியும் இருந்து வருகிறது. பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரும் மனநிலையில் இருக்காத நிலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு கட்சிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
அண்மையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்து கொண்டனர். இந்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இப்படி பல்வேறு நிர்வாகிகள் அதிமுகவை விட்டு வெளியேறி வருகின்றனர். இது குறித்து பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோருக்கு கவலையும் இல்லை என்றும் கட்சியை அழிக்கும் முயற்சியில் இருவரும் செயல்பட்டு வருவதாகவும் தொண்டர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். "பாரதப் பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று, பாஜக மூத்த தலைவர்களின் முன்னிலையில் அன்பழகன் இன்று தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சி நிர்வாகிகளை தங்கள் கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையில் அண்ணாமலை ஈடுபட்டு வருவது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.