`அநாகரிகமாக பேசுகிறார்; நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுங்கள்'

முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை டிஜிபி அலுவலகத்தில் புகார்
`அநாகரிகமாக பேசுகிறார்; நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுங்கள்'

``அதிமுக தலைவர்கள் குறித்து அநாகரிகமாக பேசி வரும் நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கைகள் எடுப்பதுடன், கூட்டங்களில் பங்கேற்க அவருக்கு தடைவிதிக்க வேண்டும்" என்று முன்னாள் அதிமுக எம்எல்ஏ இன்பதுரை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுகவின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை இன்று தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இன்பதுரை, "கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழக முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. தலைவர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், குறித்து அவதுாறு செய்யும் நோக்கில் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அநாகரிகமாக ஏக வசனத்தில் பேசியது சட்டப்படி தவறு.

கடந்த 2017-ம் ஆண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் நாஞ்சில் சம்பத் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாஞ்சில் சம்பத் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அரசியல் தலைவர்களை அநாகரிகமாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் இதுபோன்று அவதூறாக எவரையும் பேசமாட்டேன் எனவும் உறுதி அளித்து நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். தற்போது வழக்கு விசாணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற அநாகரிகமான முறையில் இனி பேசுவதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்த நாஞ்சில் சம்பத் தற்போது உறுதிமொழிக்கு எதிராக நடந்து வருகின்றார்.

மேலும் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையிலுள்ள நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத், பின்னர் சென்னையிலுள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் தற்போது அவர் பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் பார்க்கும் போது அவருக்கு நரம்பு மண்டல பிரச்சினையினால் மனநலமும் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவேதான் நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் ஏற்கனவே அளித்த உறுதிமொழிகளை மறந்து அநாகரிகமான முறையில் மேடையில் பேசி வருகிறார். நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளும் எந்த பொதுக் கூட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி அளிக்கக்கூடாது. அவர் மீது Indian Lunatic Act Sec.13 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in