குஜராத் பால விபத்தில் சிக்கியவர்களைப் பார்க்க வரும் பிரதமர் - அவசரகதியில் பழுதுபார்க்கப்பட்ட மருத்துவமனை

குஜராத் பால விபத்தில் சிக்கியவர்களைப் பார்க்க வரும் பிரதமர் - அவசரகதியில் பழுதுபார்க்கப்பட்ட மருத்துவமனை

135 பேர் உயிரிழந்த குஜராத் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்திக்கவுள்ளார். இதற்காக மோர்பியில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மோர்பி நகரின் மச்சு ஆற்றின் குறுக்கே உள்ள கேபிள் தொங்கு பாலம் நேற்று முன் தினம் பயங்கரமாக அறுந்து விழுந்தது. இதில் 47 குழந்தைகள் உட்பட 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் பலர் மோர்பி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்று பிரதமர் சந்திக்கவுள்ளார்.

இந்த சூழலில் நேற்றிரவு மருத்துவமனையில், பிரதமரின் வருகையையொட்டி ஒரு பெரிய "மேக்ஓவர்" நடந்து கொண்டிருந்தது.

ஒரு சில சுவர்கள் மற்றும் கூரையின் சில பகுதிகளில் புதிதாக வர்ணம் பூசப்பட்டன. மேலும் புதிய நீர் குளிரூட்டிகள் கொண்டு வரப்பட்டன. பாலம் விபத்தில் காயமடைந்தவர்களில் சுமார் 13 பேர் அனுமதிக்கப்பட்ட இரண்டு வார்டுகளில் உள்ள பெட்ஷீட்கள் விரைவாக மாற்றப்பட்டன. ஏராளமானோர் வளாகத்தை துடைத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனை எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன

இதை ஒரு சோக நிகழ்வு என்று கூறியுள்ள காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நாளை, பிரதமர் மோடி மோர்பியில் உள்ள மருத்துவமனைக்கு வருகை தருகிறார். அதற்கு முன்னதாக, ஓவியம் தீட்டப்பட்டு, பளபளப்பான ஓடுகள் பதிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் எடுக்கும் படங்களில் தவறாக எதுவும் இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பலர் இறந்துள்ளனர், ஆனால் இவர்கள் ஈவெண்ட் மேனேஜ்மெண்டில் பிஸியாக உள்ளனர். இவர்களுக்கு வெட்கமாக இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆம் ஆத்மி கட்சி ட்வீட்டில், "மோர்பி சிவில் மருத்துவமனையில் பிரதமரின் போட்டோஷூட்டில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்த பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 27 ஆண்டுகளில் பாஜக குஜராத்தில் சிறப்பாக பணியாற்றியிருந்தால், நள்ளிரவில் மருத்துவமனையை அலங்கரிக்க வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்துள்ளது

எதிர்க்கட்சிகளின் இந்த கடுமையான விமர்சனத்தை தொடர்ந்து மருத்துவமனையின் மேக் ஓவர் பணிகள் நிறுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in