`கடவுள் விதி என்று நாங்கள் தப்பித்து செல்ல மாட்டோம்'- அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

`கடவுள் விதி என்று நாங்கள் தப்பித்து செல்ல மாட்டோம்'- அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

"மாணவி பிரியாவுக்கு நடந்ததை கவனக்குறைவு என்பதை நேரடியாகவே ஒப்புக்கொண்டது இந்த அரசு. குஜராத் அரசைப் போல் நாங்கள் தப்பித்து செல்ல மாட்டோம்" என்று அண்ணாமலைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் பொதுமக்களுக்கு கொசு வலைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் எச்1என்1 இன்ஃப்ளூயென்சா வைரஸ் பாதிப்பு, பருவமழை பாதிப்புகளுக்கு மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று மாலை வரை தமிழகத்தில் 48,187 முகாம்கள் நடத்தப்பட்டன. பள்ளிகளை பொறுத்தவரை 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் இருக்கிறது. அந்த மருத்துவ வாகனங்களின் மூலம் ஒரு லட்சத்து 349 பள்ளி குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் 76 லட்சத்து 84 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 656 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு அனைவருமே இன்றைக்கு குணமடைந்திருக்கிறார்கள்.

தமிழக வரலாற்றில் குறிப்பாக சுகாதார துறையின் வரலாற்றில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது என்பது இதுவே முதல்முறை. எனவே 55 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை 48,187. பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் 1,349. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களுடைய எண்ணிக்கை 76 லட்சத்து 854. சென்னையை பொறுத்தவரை இன்றைக்கு கடந்த செப்டம்பர் 21-ம் தேதி முதல் நேற்று வரை நடத்தப்பட்ட முகாம்கள் 3,562. இதில் 2,33,919 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஜனவரி 1-ம் தேதியிலிருந்து இன்று வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுகளை குறிப்பிடுகையில் மிக குறைவு" என்றார்.

இதன் பின்னர் மாணவி பிரியா மரணம் தொடர்பான மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வழக்குப்பதிவு செய்யப்படாமல் பிரேத பிரசோதனையும், அடக்கமும் செய்ய முடியாது. நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவ குழுவின் அறிக்கையை வைத்துத்தான் மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே மருத்துவக் குழுவினரின் அறிக்கையை வைத்து தான் இப்பொழுது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறுதி அறிக்கை இன்னும் இரண்டு நாட்கள் கொடுப்பார்கள். தவறு செய்த மருத்துவர்கள் காணவில்லையென்றால் காவல்துறையினர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.

சுகாதாரத்துறை சீரழிந்து கிடக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அரசியலுக்காக சொல்லப்படுகிறது இந்த விஷயங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. அண்மையில் குஜராத் மாநிலத்தில் ஒரு தொங்குபாலம் அறுந்து விழுந்து 150-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். அந்த பாலம் அறுந்து விழுந்த நேரத்தில் அந்த கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் போய் சொன்னது, இதெல்லாம் கடவுள் விதி என்றார். அப்படியெல்லாம் நாங்கள் தப்பித்து செல்ல மாட்டோம். நேற்றைக்கு நடந்ததை கவனக்குறைவு என்பதை நேரடியாகவே ஒப்புக்கொண்டது இந்த அரசு. அதற்காக இன்றைக்கு தீர்வு என்கின்ற வகையில் மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு மேலும் நடவடிக்கை துறை ரீதியாகவும். சட்ட ரீதியாகவும் எடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறோம். எனவே அவர்களைப் போல் நாங்கள் தப்பித்து எல்லாம் செல்ல மாட்டோம். உண்மை என்னவோ அதை ஊருக்கு உலகறிய அறிவிப்போம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in