‘அதென்ன திஹார் ஜெயிலா அல்லது பிக்பாஸ் வீடா?’

நித்தம் வெளியாகும் சத்தியேந்திர ஜெயினின் ஜெயில் வீடியோக்கள்
‘அதென்ன திஹார் ஜெயிலா அல்லது பிக்பாஸ் வீடா?’

திஹார் ஜெயிலில் அடைபட்டிருக்கும் ஆம் ஆத்மி அமைச்சரான சத்தியேந்திர ஜெயினின் வீடியோக்கள் நித்தம் ஒன்றாக வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஜெயினுக்கு ஆதரவாகவும் எதிராகவும் புரளும் அரசியல் கச்சேரிகளுக்கு அப்பால், ’அது திஹார் ஜெயிலா அல்லது பிக்பாஸ் வீடா..?’ என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்தியேந்திர ஜெயின், ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் மே 31 அன்று கைது செய்யப்பட்டார். தற்போது திஹாரில் சிறைவாசம் அனுபவிக்கும் சத்தியேந்திராவை சுற்றி, வெளியே அரசியல் சூறாவளிகள் சுழன்றடிக்கின்றன. டெல்லி மாநகராட்சி மற்றும் குஜ்ராத் சட்டப்பேரவை தேர்தல் என பாஜக-ஆஆக இடையிலான நேரடி கோதாவில், ஜெயிலில் அடைபட்டிருக்கும் ஜெயினும் அடிபட்டு வருகிறார்.

கேஜ்ரிவால் - சத்தியேந்திர ஜெயின்
கேஜ்ரிவால் - சத்தியேந்திர ஜெயின்

சிறைவாசம் இருக்கும் சத்தியேந்திரா ஜாமீன் கேட்டு அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்ற படிகளில் தவம் இருக்கின்றனர். தனது ஜாமீன் மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் பல்வேறு தரவுகளையும் ஜெயின் முன்வைத்து வருகிறார். ஆனால் அவற்றுக்கு இடம்கொடாத வகையில், சிறை அறையிலிருந்து அவரது அனுதின வீடியோக்கள் வெளியாகி ஜெயின் இமேஜை டேமேஜ் செய்து வருகின்றன. இவை டெல்லி மற்றும் குஜராத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மிக்கு தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

சிறைக்குள் அடைபட்டபோதும் சத்தியேந்திர ஜெயினின் அன்றாடங்கள் சொகுசாக கழிவதை அம்பலப்படுத்தும் வகையில் அண்மையில் ஒரு வீடியோ வெளியானது. அதில் அவருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை மசாஜ் அளிக்கப்பட, அதென்ன ஜெயிலா அல்லது மசாஜ் பார்லரா என பாஜகவினர் பாய்ந்தார்கள். ஆஆக சார்பில், ஜெயினின் உடல் அவதிகளை பட்டியலிட்டு ’அவை மசாஜ் அல்ல; பிசியோதெரபி சிகிச்சை’ என சமாளித்தனர். ஆனால் மசாஜ் அளிப்பவர் பிசியோதெரபிஸ்ட் அல்ல சக சிறைவாசி என்பதை விளக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாயின. அதிலும் மசாஜ் அளிக்கும் நபர், பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தண்டனை அனுபவிப்பவர் என்றும், ஆம் ஆத்மி அமைச்சரின் சகவாசம் பார்த்தீர்களா என்றும் பாஜவினர் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் தற்போதைய தவணையாக வெளியாகி இருக்கும் புதிய வீடியோவில், சிறை அறையில் அடைபட்டிருக்கும் ஜெயின் சுவையான உணவு ரகங்களை ரவுண்டு கட்டுகிறார். கடந்த வாரம் ஜெயினின் ஜாமீன் கோரும் மனுவில் வழக்கறிஞர் வாயிலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட புகார் பட்டியலின் எதிரொலியாக புதிய வீடியோ கசிய விடப்பட்டுள்ளது. ‘திஹார் சிறையில் முறையாக உணவு வழங்க மறுக்கிறார்கள். இதனால் பட்டினியில் அவதிப்படுகிறேன். என்னுடைய எடையில் 28 கிலோவை இழந்திருக்கிறேன். ஜெயின் மத சடங்குக்கான விரதத்தை கடைபிடிப்பதற்கான அடிப்படை உணவு கிடைக்காததில் இரும்பு மற்றும் புரத சத்துக்கள் இழந்து நலிந்து போயிருக்கிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப் கூட சிறையில் நல்ல உணவுகள் கிடைத்தன’ என்றெல்லாம் அவர் புலம்பியிருந்தது தேர்தல் பிரச்சார களத்திலும் எதிரொலித்தது.

எனவே ஜெயின் சொல்வது அத்தனை பொய் என்பதை நிறுவும் வகையில் புதிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஸ்டார் ஹோட்டல் பாணியில் விதவிதமான உணவுகளை ஜெயின் ரசித்து ருசிக்கிறார். அவற்றில் சாலட், பழங்கள், நட்ஸ் ரகங்கள் என பலவும் நிறைந்திருக்கின்றன. இந்த வீடியோவை அதிகம் பகிரும் பாஜகவினர் சத்தியேந்திர ஜெயினையும், கேஜ்ரிவாலையும் வழக்கம்போல வம்பிழுத்து வருகின்றனர்.

சத்தியேந்திர ஜெயினை முன்னிறுத்தி அரங்கேறும் இந்த அரசியல் களேபரங்களுக்கு அப்பால், கசப்படைந்த பொதுமக்கள் வேறு சில கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். ஆம் ஆத்மி அமைச்சர் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கை குறித்து ஆட்சேபம் தெரிவிக்கும் அவர்கள், ஜெயிலிருக்கும் ஜெயினின் வீடியோக்கள் எப்படி வெளியே கசிகின்றன என்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். சிறையில் விஐபிக்கான அனுகூலங்களை அனுபவிக்கும் சத்தியேந்திர ஜெயினை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராவை அவரது அறையிலேயே சிறை நிர்வாகம் பொருத்தியிருக்கிறது. அதன் பதிவுகள் அவ்வப்போது வெளியாவது, அதென்ன திஹார் சிறையா அல்லது பிக்பாஸ் வீடா என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.

டெல்லி மற்றும் குஜராத் தேர்தல் களங்களில், மக்கள் நலன்களுக்கு அத்தியாவசியமான அம்சங்களை புறம்தள்ளும் அரசியல் கட்சிகள் இப்படி லாவணி பாடுவது குறித்தும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in