மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணதொகை ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டும் என மண்டபம் பகுதியில் நடைபெற்ற மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இன்று தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் டாப்கோ ஃபெட், மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் மீனவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இந்த மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். '’மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது. இனியது உயர்த்தப்பட்டு 8000 ரூபாயாக வழங்கப்படும்.
45,000 மீனவர்களுக்கு கூட்டுறவு கடன் வழங்கப்படும். மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் 5,035 வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும். தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் 3,400 லிட்டரில் இருந்து 3, 700 லிட்டராக அதிகரிப்பு.
விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 18,000ல் இருந்து 19,000 லிட்டராக அதிகரித்து வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய டீசல் 4,000ல் இருந்து 4,400 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 2.07 லட்சம் மீனவர்களுக்கு ரூ.62 கோடி நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.