மீனவர் பிரதிநிதித்துவம்: குளச்சலில் நீதி செய்வாரா முதல்வர்?

எதிர்பார்ப்போடு காத்திருக்கும் மீனவர்கள்
மீனவர் பிரதிநிதித்துவம்: குளச்சலில் நீதி செய்வாரா முதல்வர்?
முதல்வர் ஸ்டாலின்

குளச்சலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை திமுகவின் போட்டி வேட்பாளர் நசீர் தோற்கடித்தார். திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஜான்சன் சார்லஸ், மீனவ சமூகத்தை சேர்ந்தவர். இதனால் மீனவர் பிரதிநிதித்துவம் பறி போயிருப்பதாகவும், முதல்வர் இதில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துவருகின்றன.

குறும்பனை பெர்லின்
குறும்பனை பெர்லின்

இதுகுறித்து நெய்தல் மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் காமதேனு இணையதளத்திடம் கூறுகையில், ‘குளச்சல் நகராட்சியில் போட்டியிட்டு வென்ற மீனவர் சமூகத்தைச் சேர்ந்த ஜான்சன் சார்லஸை சேர்மன் வேட்பாளராக முதல்வர் அறிவித்தார். 24 உறுப்பினர்களைக்கொண்ட குளச்சல் நகராட்சியில் 14 உறுப்பினர்களைக் கொண்டு நகரசபைத் தலைவராகும் வாய்ப்பு இருந்ததைத் தட்டிப்பறிக்கும் விதமாக முன்னாள் நகராட்சித் தலைவரும், திமுக பிரமுகருமான நசீர், பாஜக உறுப்பினர்களையும் திமுக சார்பில் வெற்றிபெற்ற ஒருசில உறுப்பினர்களையும் பதவி ஆசையும், பண ஆசையும் காட்டி திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை தோற்கடித்துவிட்டார்.

இது அப்பட்டமான சமூக நீதிக்கு எதிரான செயல் மட்டுமல்ல... இது கட்சிக்கட்டுப்பாட்டை மீறிய செயலுமாகும். இவ்வாறு கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் பெற்ற பதவிகளை பறிக்க சமூக நீதியைக் கடைபிடிக்கும் முதல்வரின் துணிச்சலான முடிவுக்கு மீனவர்கள் தலைவணங்குகிறோம். குளச்சல் நகராட்சியில் நடந்த இந்த துரோக நடவடிக்கைகளில் இன்னும் பல திமுக தலைவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களையும் இனம்கண்டு முதல்வர் களையெடுக்கவேண்டும்.

மீனவர்களுக்கு எதிரான அரசியல் துரோகம் இன்று நேற்று நடப்பதல்ல. 1957 முதல் 1962 வரை காமராஜர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறைக்கு பொறுப்பாக இருந்து மிகச்சிறந்த பணியாற்றி ஊழல்கறைபடியாத அமைச்சர் என்று பெயரெடுத்த லூர்தம்மாள் சைமனை, 1962 தேர்தலில் காமராஜர், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்ததும் சாதிய துவேஷத்தில் ஒருசில காங்கிரஸ் தலைவர்கள் சேர்ந்து காங்கிரசின் மாவட்டத் தலைவராக இருந்த சுவாமிதாஸ் என்பவரை சுயேச்சையாக களமிறக்கி சாதிவெறியைத்தூண்டிவிட்டு மீனவர்களின் ஒப்பற்ற தலைமையைத் தோற்கடித்தார்கள்.

அப்போது சில நாட்கள் மட்டும் சுவாமிதாசை கட்சியிலிருந்து நீக்கிவைத்து பின் கட்சியில் சேர்த்துக்கொண்டார்கள். அதுபோன்று ஒரு கண்துடைப்புபோல் தற்போதைய நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் காலங்காலமாக மீனவர்களுக்கு எதிராக நடைபெறும் துரோகங்களுக்கு இத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சி அறிவித்த வேட்பாளரை தோற்கடித்த நசீரின் குளச்சல் நகராட்சித் தலைவர் பொறுப்பைப் பறித்துவிட்டு நியாயமாக மறுதேர்தல் நடத்தவேண்டும்.

அதோடு கட்சிக் கட்டுப்பாட்டை அப்பட்டமாக மீற அவருக்கு எல்லா விதத்திலும் துணைநின்ற திமுக தலைவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து சமூக நீதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை முதல்வர் உணர்த்தவேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in