`உங்கள் குரல் எங்களுக்காக ஒலிக்கும் பட்சத்தில்..!'- குமரி வரும் ராகுல் காந்திக்கு மீனவர்கள் அடுக்கடுக்கான கோரிக்கை

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

கன்னியாகுமரியில் இருந்து நாளை (செப்டம்பர் 7-ம் தேதி) யாத்திரை தொடங்க உள்ள ராகுல் காந்திக்கு தங்கள் தரப்பு கோரிக்கைகளை பட்டியலிட்டு மீனவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளுக்காகவும் அவர் குரல் எழுப்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் அண்டன் கோமஸ் தங்களின் கோரிக்கைகளை ராகுல் காந்தியின் கவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது கோரிக்கை மனுவில், "வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் இந்திய தேசத்திற்கும், மக்களுக்கும் முக்கியமான தேர்தல். காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக்கியமான தேர்தல் என்பதை அனைவரும் அறிவோம். இந்த நிலையில் தேசம் ஒன்றுபட பாரத் ஜோடோ என்ற பெயரில் 150 நாட்கள் பாத யாத்திரை, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொள்ளும் தங்களை ஜாதி, மத, அரசியல் பேதமின்றி அனைவரும் வாழ்த்துகிறோம்.

ரத யாத்திரை என்ற பெயரில் தேசம் கலவர பூமியானதை கண்ட நமக்கு, 40 ஆண்டுகளுக்கு முன் இளம் துருக்கியர் முன்னாள் பிரதமர் சந்திரசேகர் பாரதத்தை பாதத்தால் அளந்த, குமரி முதல் டெல்லி வரையான பாத யாத்திரை போல், இன்றைய அரசியல் தலைவர்கள் யாரும் துணியாத நிலையில், மக்களை ஒன்றுபடுத்த, பிரிவினையை வேரறுக்க, பாரத் ஜோடோ எனும் முழக்கத்தோடு முக்கடல் சங்கமாம் குமரியிலிருந்து சிங்கமென வீர நடைபோட திட்டமிட்டுள்ள தங்களுக்கு எப்போதும் போல் மீனவர் ஆதரவு உறுதியாக இருக்கும்.

2024-ல் உலகம் வியக்கும் மாபெரும் உங்கள் (மக்கள்) வெற்றியில் முதல் வெற்றி குமரியிலிருந்தே ஒலிக்கும். அந்த வெற்றிக்கு என்றும் போல் பிரதிபலன் எதிர்பாராமல் மீனவ மக்களே ஆதாரமாக இருப்பார்கள். ஆனால் உங்களின் இந்த பயணத்தில் 28 உயிரை பலி கொடுத்த துயரில் இருக்கும் மீனவ மக்களை சந்திக்கும் வாய்ப்பைத்தரும் தேங்காய் பட்டிணம் வழி திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

வெற்றிக்கு மீனவர்கள் ஆதாரமாக இருக்கும் குமரியிலேயே நிலை இதுவென்றால் மற்ற தொகுதிகளின் நிலை கேட்க வேண்டியதில்லை. ஆக மீனவர்கள் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் மதிக்கப்படும் நிலைதான் இன்னும் இருக்கிறது. ஆனாலும் பாரத் ஜோடோ என முழங்கும் தங்களை நம்புகிறோம். பாரத் ஜோடோவில் நாங்களும் உள்ளோம் என கருதுகிறோம். அதன் அடிப்படையில் தங்களின் யாத்திரையின் போது நீங்கள் முன் வைக்க வேண்டிய எங்கள் கோரிக்கைகளை உங்களிடம் முன் வைக்கிறோம்.

தேங்காய் பட்டிணம் மீனவர் உயிரிழப்புகளுக்கு உடனடி தீர்வு, ஐஆர்இ கடற்கரை மணல் எடுக்க தரப்பட்ட அனுமதி ரத்து, கடலிலும், கரையிலும் காற்றாலைகள் ஏற்படுத்தும் திட்டத்தை எதிர்த்து போராடும் மீனவர்களுக்கு ஆதரவு, கடலில் மீத்தேன், பெட்ரோலியம் போன்றவைக்கான கிணறு, சுரங்கம் போன்ற திட்டங்களுக்கு தடை, மீனவர்களை பழங்குடி பட்டியலில் சேர்ப்பது, உற்பத்தி விலையில் டீசல், மண்ணெண்ணெய் வழங்குதல், இலங்கை கடற்படையினர் தாக்குதல் பிரச்சினைக்கு தீர்வு, பாரம்பரிய மீனவனின் அனுபவ ஆலோசனையின்றி மீன்பிடி, கடல் தொடர்பான சட்டங்கள் இயற்றப்படாது என்ற உறுதி, வனப்பாதுகாப்பு சட்டம் போல் கடல், கடற்கரை, மீனவரை பாதுகாத்திட முழுமையான சட்டம், நடைமுறையில் உள்ள விஞ்ஞானபூர்வமற்ற, அந்நிய நாட்டாரால் திணிக்கப்பட்ட சட்டங்களில் திருத்தம், நாட்டின் மொத்த உற்பத்தியில் மீனவர் பங்களிப்பின் சதவீத அடிப்படையில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டுகிறோம்.

உங்கள் குரல் எங்களுக்காக ஒலிக்கும் பட்சத்தில் இந்தியா முழுமையும் மீனவர்கள் உங்கள் வாக்கு வங்கியாகவே இருக்கவும், உழைக்கவும் உறுதி கூறுகிறோம்' என்று மனுவில் பட்டியல் இட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in